முருங்கையின் மகத்துவம்
சித்தமருத்துவர் - அருண் சின்னையா நிறுவனர்- தமிழர் சித்த உணவியல் இயற்கை மருத்துவ சங்கம்Apr 11, 2015
முருங்கைக்கீரை என்று சொன்னால் இது மிகச் சாதாரணமாக வளர்க்கக்கூடிய ஒரு அற்புதமான கீரை. அதாவது கீரைகளின் ராணி என்று சொன்னால் அது இந்த முருங்கைக் கீரையைத்தான் சொல்ல வேண்டும். ஆனால் இந்த முருங்கைக்கீரை நிறைய நபர்களுக்கு ஒத்துவராது, சாப்பிடத்தோன்றாது, ருசியாகவும் இருக்காது என்று மிகப்பெரிய ஒரு புகார் பட்டியல் இந்த முருங்கைக்கீரை மீது உண்டு. ஏனென்றால் நாம் அப்படித்தான், மிக ருசியாக எதுவெல்லாம் எண்ணெயில் போட்டு பொறிக்க முடியுமோ, எதுவெல்லாம் எண்ணெயில் போட்டு வறுக்க முடியுமோ, எதுவெல்லாம் சாப்பிடுகிற பொழுது நாக்கிலிருந்து நீர் சொட்டுகிறதோ அதை மட்டுமே ரசிக்கக்கூடிய, அரவணைக்கக்கூடிய பக்குவமான மனசுக்கு சொந்தக்காரர்கள். ஆக சத்தான உணவுகளை புறந்தள்ளுவது என்பது நமக்கு கைவந்த கலை. அதே நிலையில் இருக்கிற பொழுதுதான் நமக்கு பல்வேறுபட்ட நோய்கள் வருகிறது என்ற உண்மையை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்றால் கண்டிப்பாக முருங்கைக்கீரையை நீங்கள் மறக்க மாட்டீர்கள்.
சென்னையில் பார்த்தோம் என்றால் முருங்கைக்கீரைக்கு ஏகப்பட்ட தேவை. மக்கள் விரும்புகிற அளவுக்கு இன்று முருங்கைக்கீரை சென்னையில் கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு முருங்கைக்கீரையைத் தேடக்கூடிய ஆரோக்கியமான ஒரு சந்தைக்கூட்டம் உருவாகியிருக்கிறது. மக்கள் தங்களுடைய உடல் நிலையைப் பற்றி அறிந்துகொள்ளக்கூடிய ஒரு பக்குவமான நிலைக்கு இன்று வந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதன் அடிப்படையில் சிறுதானியங்களான வரகு, திணை, குதிரைவாலி, சாமை, கம்பு, சோளம், கேழ்வரகு இதுவெல்லாம் இன்று மக்களிடையே புழக்கத்தில் ஒரு சாதாரண நிலைக்கு வரக்கூடிய சூழலுக்கு வந்திருக்கிறது. முருங்கைக் கீரையை தேடிப்பெறுவதற்கும் நிறைய நபர்கள் இப்போது வந்திருக்கிறார்கள். ஆக இதையே சாதகமாக பயன்படுத்திக்கொண்டு முருங்கை மரம் வளர்த்து முருங்கைக்கீரையை வணிகமாகக் கொண்டு செல்லக்கூடிய ஒரு கூட்டமும் உருவாகியிருக்கிறது, அது நல்லது வரவேற்கக்கூடியதும் கூட. அப்படி இந்த முருங்கைக்கீரையில் என்ன சத்துக்கள் அதிகமாக இருக்கிறது என்றால் கால்சியம், சுண்ணாம்புச்சத்து. சுண்ணாம்புச்சத்து மிக அதிகமாக இருக்கக்கூடிய ஒரு மூலிகை எதுவென்றால் முருங்கைக்கீரைதான்.
முருங்கைக்கீரை நல்லதா?, பால் நல்லதா?, பாலில் கால்சியம் அதிகமா?, முருங்கைக்கீரையில் கால்சியம் அதிகமா? என்று பார்க்கும் பொழுது முருங்கைக்கீரையில் மிக அதிக அளவில் கால்சியம் இருக்கிறது. அதாவது பாலை விட 17 பங்கு கால்சியம் என்னும் சுண்ணாம்புச்சத்தை தனக்குள் கொண்டிருக்கக்கூடியது முருங்கைக்கீரை. இந்த முருங்கைக்கீரையைத் தொடர்ந்து விடாமல் சாப்பிடுபவர்களுக்கு எலும்பு நல்ல வலுவாகும், எலும்புகளுக்கு உள்ளே இருக்கக்கூடிய மச்சை அதாவது platelet counts மிக அதிக அளவு உருவாகும். நமது உடம்பை மேம்படுத்தக்கூடிய சிவப்பணுக்களுடைய எண்ணிக்கையை அதிகப்படுத்தக்கூடிய தன்மை இந்த முருங்கைக்கீரைக்கு உண்டு. ஹீமோகுளோபின் அளவு நிறைய ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகக் குறைவாக இருக்கக்கூடிய ஒரு சூழலில் இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
இந்த முருங்கைக்கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கிறது, இதை அரசுகளே மக்களிடையே எடுத்துச் செல்லலாம். சாதாரணமாக பார்த்தோம் என்றால் ஊட்டச்சத்து சார்ந்த ஒரு துறை nutritional board என்று சொல்வோம். nutritional board என்பது இந்திய அரசு ஆளுகைக்கு உட்பட்ட ஒரு board. பல்வேறுபட்ட உணவுகளை வகுத்து பல்வேறுபட்ட உணவுகளில் இருக்கக்கூடிய சத்துக்களை பகுத்து ஆய்வு செய்து, மக்களிடையே கொண்டு செல்லக்கூடிய துறை nutritional board என்று சொல்லக்கூடிய துறை. அந்த உணவுத்துறையானது ஆய்வுசெய்கிறார்கள், ஆய்வுசெய்த விசயங்களை மக்களிடையே கொண்டு செல்லக்கூடிய அளவுக்கு நம்முடைய அமைப்பு முறைகள் இல்லாத காரணத்தினால் மிகவும் நோய்களுக்கு உட்படக்கூடிய ஒரு சூழல் நம்மிடையே இருக்கிறது. எனவே நல்ல ஒரு ஊட்டமான உணவு எது, ஒழுங்கான உணவு எது, முறையான உணவு எது என்பதை அரசையே நம்பி இருக்காமல், நாமே தனிப்பட்ட முறையில் சில ஆய்வுகளை செய்து அதை சரிசெய்துகொள்வதுதான் முறையாக இருக்கும்.
இன்றைய அளவில் கர்ப்பிணிகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கவேண்டும் என nutritional boardஎன்று சொல்லக்கூடிய உணவுத்துறை ஆய்வுகள் செய்கிறது. முதல் மாதம் என்ன உணவு தரவேண்டும், இரண்டாவது மாதம், மூன்றாவது மாதம் என்று முறையாக உணவுகள் கொடுக்கிறபொழுது அறுவை சிகிச்சை இன்றி அற்புதமாக குழந்தையைப் பெற இயலும் என்று அந்தத் துறை சொல்லுகிறது. ஆனால் நம்மிடையே அந்த விழிப்பு இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆக நம் உடம்பில் இருக்கக்கூடிய இரத்தப் பற்றாக்குறையிலிருந்து, எலும்புகள் வலுவிலிருந்து, எலும்புகளை மேம்படுத்துவதிலிருந்து, எலும்புகளுக்கு ஊடாக இருக்கக்கூடிய இரத்தத்தட்டுக்களை உற்பத்திபண்ணுவதிலிருந்து மிகச்சிறந்த பலனை தனக்குள் கொண்டது முருங்கைக்கீரை.
முருங்கைக்கீரையில் கால்சியம் மட்டும்தான் இருக்கிறதா என்றால் அல்ல, தேவையான அளவு இரும்புச் சத்தும் தனக்குள் உள்ள அற்புதமான மூலிகை இந்த முருங்கைக்கீரை. நான் சொன்னேன் இல்லையா ஹீமோகுளோபின் குறைவாக இருத்தல் (Anemic) இரத்த சோகையை முழுமையாக ஓட ஓட விரட்டக்கூடிய ஒரு மூலிகை எது என்றால் முருங்கைக்கீரைதான். ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை எடுத்து மூன்று மிளகு சேர்த்து நன்றாக அரைத்து சாறெடுத்து பச்சையாக அந்த சாறை விடாமல் பத்துநாட்கள் சாப்பிட்டு வந்தோம் என்றால் கண்டிப்பாக இரத்த அளவு அதிகமாக ஹீமோகுளோபின் அளவு அதிகமாகும். ஒரு நபருக்கு ஹீமோகுளோபின் என்று சொல்லக்கூடிய சிவப்பணுக்கள் குறைவாக இருக்கிற நேரத்தில்தான் அவரது உடம்பில் ஒவ்வாமை என்று சொல்லக்கூடிய அலர்ஜி மிகவும் அதிகமாகும். இந்த அலர்ஜிதான் sinusitis ஆக மாறும். ஆக ஒவ்வாமை கூறுகளை விரட்டுவதற்கு ஏற்ற ஒரு ஒப்பற்ற ஒரு மூலிகை எது என்றால் முருங்கைக்கீரை. இந்த முருங்கைக்கீரை என்பது உடம்பில் இருக்கக்கூடிய ஒவ்வாமையை முழுமையாக அகற்றக்கூடிய தன்மை உள்ளது.
காலையில் எழுந்து தும்மக்கூடிய தும்மலை முழுமையாக விரட்டக்கூடிய தன்மை இந்த முருங்கைக்கீரைக்கு உண்டு. இந்த முருங்கைக்கீரையை நீங்கள் சூப் மாதிரி கூட செய்து சாப்பிடலாம். மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, கொத்துமல்லி, சிறிது உளுந்து சேர்த்து அரைத்த பொடியுடன் முருங்கைக்கீரையும் சேர்த்து நன்றாக அவித்து சாறு எடுத்து சாப்பிட்டோம் என்றால் கைகால் வலி, உடம்புவலி, மூட்டுவலி, கழுத்து வலி எல்லா நோய்களுக்கும் கேட்கக்கூடிய மிக அற்புதமான பொருள் எதுவென்றால் இந்த முருங்கைக்கீரையை நாம் சொல்லியே ஆகவேண்டும்.
-தொடரும்
மேலும் தொடர்புக்கு:
சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94 வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667
இணைய தளம்: www.drarunchinniah.in
No comments:
Post a Comment