டென்ஷன் வேண்டாம்! – மாரடைப்பை தடுக்க முதல் வழி
பணக்காரர்களுக்கும், வயதானவர்களுக்கும் மட்டுமே வரும் என பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்த மாரடைப்பு, இன்று யாரையும் குறி வைக்கலாம். சிம்பிளாகச் சொன்னால் இதயம் இருக்கிற யாருக்கும், மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்) தாக்கலாம்.
“80 வயதுக்குள் மாரடைப்பு வருவது என்பது ஆண்டவன் கட்டளை அல்ல. மனிதனின் விருப்பம்” என்றார் பிரபல இதய நோய் நிபுணர் பால் டட்லி ஒயிட். அவர் சொன்ன மாதிரி, வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், சோம்பேறித் தனம் போன்ற பல காரணங்களால் மாரடைப்பை அழையா விருந்தாளியாக வரவழைத்துக் கொள்கிற மனிதர்களே அதிகம். பெருகி வரும் இள வயது மாரடைப்பு பற்றியும், தவிர்க்கவும், தப்பிக்கவும் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றியும் அறிய வேண்டியது அவசியம்.
இதயத்தின் தசைநார்களுக்கு ரத்தத்தையும், ஒக்சிஜனையும் எடுத்துச் செல்ல இடது பக்கம் இரண்டும், வலது பக்கம் ஒன்றுமாக மொத்தம் 3 கரோனரி ரத்தக் குழாய்கள் உள்ளன. இதயம் என்கிற இன்ஜினுக்கு ரத்தம் என்கிற ஒயில் சீராகப் போய்க் கொண்டிருக்கிற வரை பிரச்னை இல்லை. மேலே சொன்ன 3 ரத்தக் குழாய்களில் ஏதேனும் ஒன்றில் 100 சதவிகித அடைப்பை உண்டாக்கும் போது மாரடைப்பு வருகிறது.
உலகமெங்கும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, இந்திய, இலங்கை மக்களுக்கே மாரடைப்பு அதிகம் தாக்கும் அபாயம் இருப்பது தெரிகிறது. புலம் பெயர்ந்தவர்களும் இதில் விதிவிலக்கில்லை. சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆப்பிரிக்கா எனப் பரவலாக, இளம் வயதுக்காரர்கள் மாரடைப்பு பாதிப்புக்கு ஆளாவது தெரிய வந்திருக்கிறது. காரணம், உணவு, உடற்பயிற்சி போன்றவற்றில் காட்டும் அலட்சியம். அமெரிக்காவில் சைக்கிள் ஓட்டுகிற பழக்கம் பலருக்கும் இருக்கிறது. 70 வயது முதியவர்கூட சைக்கிள் ஓட்டுவார். நாம் அது அந்தஸ்தை சீண்டிப் பார்க்கிற விஷயமென ஒதுக்குகிறோம். கிராமத்தில் வசிப்பவர்களைவிட, நகரத்தில் வசிப்பவர்களுக்கு மாரடைப்புக்கான அபாயம் அதிகம். கடிகாரத்தின் ஆதிக்கத்தில் எந்திர கதியில் ஓடும் வேகமே காரணம்.
தனிமையில் இருக்கும் போது மாரடைப்பு வந்தால்?
வேலை செய்து கொண்டிருக்கும் போதோ, நடந்து கொண்டிருக்கும் போதோ, மாரடைப்புக்கான அறிகுறி தெரிந்தால், அந்த வேலையை முடித்து விடலாம் என்றோ, அப்படியே நடந்து போக வேண்டிய இடத்தை அடைந்து விடலாம் என்றோ நினைப்பது முட்டாள்தனம். உடனடியாக வேலையை நிறுத்திவிட்டு, உடைகளைத் தளர்த்த வேண்டும். காற்றோட்டமான இடத்தில் அதிகக் கூட்டம் சூழாமல் உட்கார வேண்டும். 4 மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குப் போய்விடுவது உயிரைக் காப்பாற்றும். அது சாதாரண கேஸ்ட்ரிக் கோளாறு என அலட்சியம் செய்வது மிகப் பெரிய ஆபத்து.
மாரடைப்பு வருவதற்கான அபாய காரணங்கள் என சிலதைச் சொல்லலாம். அதில் முதலிடத்தைப் பிடிப்பது புகை மற்றும் புகையிலைப் பழக்கம். அடுத்து உயர் ரத்த அழுத்தம், கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு, அளவுக்கதிக கொலஸ்ட்ரால், உடல் பருமன், மிக முக்கியமாக பாரம்பரியம். அதாவது 50 வயதுக்குள் மாரடைப்பு வருவது பரம்பரையாகத் தொடர்ந்து வரும் பட்சத்தில், குடும்ப உறுப்பினர்கள், குழந்தைப் பருவத்திலிருந்தே அதிகபட்ச எச்சரிகையுடன் இருக்க வேண்டியது முக்கியம்.
“எனக்கு மேல சொன்ன எதுவும் கிடையாது. ஸோ… எனக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பே இல்லை” என நீங்கள் நினைத்தால், அதை அல்ப சந்தோஷம் என்று தான் சொல்ல வேண்டும். மாரடைப்புக்கான வாய்ப்புகள் உங்களுக்குக் குறைவு என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர, வரவே வராது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. மாரடைப்புக்கான மிகச் சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. இருந்தாலும் முடிந்த வரை அதன் அபாயத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள சில வழிகள் உண்டு.
“நேற்றுவரைக்கும் நல்லாதான் இருந்தாங்க. பேசிக்கொண்டே இருந்தவங்க அப்படியே சுவரில சாஞ்சு இருந்தாங்க. அப்படியே உயிர் போயிட்டுது” என்றும், “ஒருநாளும் நெஞ்சுவலி எண்டு படுத்ததேயில்லை. அவருக்கு போய் ஹாட் அட்டாக் எண்டா நம்ப முடியாமல் இருக்கு” என்றும் பலரும் வியந்து போய் சொல்லிக் கேள்விப் பட்டிருப்போம். ஒரு உண்மை தெரியுமா? உடலில் எந்த அபாய அறிகுறிகளும் தெரியாதவர்களும் மாரடைப்புக்கு ஆளாகுகிறார்கள். வெளிப்படையான அறிகுறிகளையும், மாரடைப்பு அடையாளங்கள் எனப் பலரும் புரிந்து கொள்வதில்லை.
“சாப்பிட்டதும் நடக்க முடியலை. சாப்பிட்டு வேகமா நடந்தா, நெஞ்சு வலி வருது. வயிறு கனமா இருக்குது. வேகமா ஓடினாலோ, நடந்தாலோ, நெஞ்சை அழுத்தற மாதிரி இருக்கு. மூச்சுத் திணறல்போல இருக்கு. சின்னச் சின்ன வேலை செய்தாலே உடம்பு களைச்சுப் போகுது…” இவை எல்லாமே மாரடைப்பின் அறிகுறிகள்தான். மிக முக்கியமாக நடக்கும் போதும், படி ஏறும் போதும் நெஞ்சில் வலி உண்டாகி, இடது தாடைக்கும், இடது கைக்கும் அது பரவினால் உடனடியாக உஷாராக வேண்டியது அவசியம்.
மருத்துவரைச் சந்தித்து இசிஜி சோதனை செய்ய வேண்டும். அது நொமல் எனக் காட்டினால், அடுத்து டிரெட்மில் டெஸ்ட் செய்யப்படும். பிறகு ஒஞ்ஜியோகிராம் என்கிற சோதனை. அதில் எத்தனை ரத்தக் குழாய்களில் அடைப்பு, எந்தளவுக்கு என்பது துல்லியமாகத் தெரியும். ஒரு ரத்தக் குழாயில் மட்டும் அடைப்பு என்றால் மருந்துகள் கொடுத்தோ, ஒஞ்சியோபிளாஸ்டி முறையிலோ சரியாக்கலாம். 3 குழாய்களிலும் அடைப்பு என்றால் அறுவை சிகிச்சை தேவைப்படும். அதுதான் பைபாஸ் சேஜரி.
வராமலிருக்க என்னவெல்லாம் செய்யலாம்?
- 5 மாதக் கருவிலேயே குழந்தைக்கு இதய நோய் உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்கலாம். குழந்தை பிறந்ததும் இன்னொரு சோதனையும் அவசியம். அதே மாதிரி குழந்தையின் 3வது வயதில் மற்றொரு சோதனை செய்து, இதய நோய் இருந்தால், சரி செய்ய இன்று வசதிகள் உண்டு.
இளம் வயதில் தொண்டைப் புண்ணோ, கை, கால் மூட்டுக்களில் வீக்கமோ, ருமாட்டிக் காய்ச்சலோ வந்தால், அதை அலட்சியப் படுத்த வேண்டாம். அவை இதயத்தைப் பாதிக்கலாம். - 40 வயதைத் தொட்டு விட்ட யாரும் மாரடைப்புக்கான எந்த அறிகுறியும் இல்லாவிட்டாலுமே, வருடம் ஒரு முறை ரத்தக் கொழுப்பு, சர்க்கரை, கொலஸ்ட்ரால் அளவுகளைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இசிஜியும் செய்து பார்க்கலாம்.
- குடும்பத்தில் இளவயது மாரடைப்பால் பாதிக்கப் பட்டோர் இருப்பின், மற்ற நபர்கள், 25 வயதிலிருந்தே, இந்த வருடாந்திர சோதனைகளை ஆரம்பிக்கலாம்.
- தினம் 45 நிமிட உடற்பயிற்சி மிக மிக முக்கியம். அது நடை, நீச்சல், சைக்கிளிங் என எதுவாகவும் இருக்கலாம். 6 மணி நேரத் தூக்கமும் அவசியம்.
- பெண்களுக்கு மெனோபாஸ் வரும் வரை மாரடைப்புக்கான அபாயம் குறைவு. மாதவிலக்கு நின்ற பிறகு, அவர்களுக்கு, ஆண்களைவிடத் தீவிரமாகவே இதய நோய் தாக்கலாம். பெண்களுக்கு மாரடைப்பு வராது என்கிற அலட்சியம் வேண்டாம்.
- சிகரெட் பழக்கம் வேண்டாம். குடிப்பழக்கத்துக்கும் கும்பிடு போடுங்கள்.
- அதிக உடல்பருமன் ஆபத்தானது. உயரத்துக்கேற்ற எடையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
- அதிக கொழுப்புள்ள உணவுகளும், பேக்கரி உணவுகளும், ஃபாஸ்ட் ஃபுட் அயிட்டங்களும் தவிர்க்கப் பட வேண்டும்.
- எல்லாவற்றையும்விட முக்கியமாக டென்ஷனுக்கு இடமே தரக் கூடாது. சின்னச் சின்ன விஷயங்களுக்கும் டென்ஷன் ஆவது, உணர்ச்சி வசப்படுவது, கோபம் போன்றவையும் மாரடைப்புக்குப் பிடித்த விஷயங்கள்.
– சுஸ்ருதா
No comments:
Post a Comment