0

பேலியோ டயட் என்றால் என்ன?

Paleo or Cave Man Diet என்று அழைக்கப்படும் இந்த உணவு, மனித இனம் நெருப்பு என்றால் என்னவென்று அறியாத, தானியங்கள் மற்றும் இன்றைய முக்கிய உணவாக நாம் உண்ணும் எதையும் உணவென்று கண்டுபிடிக்காத, மனிதன் குகைகளில் வசித்த காலத்தில் மனிதன் என்ன சாப்பிட்டு உயிர் வாழ்ந்தானோ அந்த உணவைச் சாப்பிடுவது.
உண்மைதான், நமது இன்றைய உணவுகள் எல்லாமே மிக சமீபத்தில் அதாவது சுமார் 10000 ஆண்டுகளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டவை. நெருப்பில் சமைத்து உண்பதிலிருந்து, அரிசி, பருப்பு, பிஸ்ஸா, கோலா, ப்ரோட்டீன் பானம் வரைக்கும் பசியை மூலதனமாக வைத்து ருசியை விற்க ஆரம்பித்து இன்றைக்கு அசால்ட்டாக இன்சுலினை வயிற்றில் குத்திக்கொண்டு டிவியில் கிரிக்கெட் பார்க்கும் அளவிற்கு முன்னேறி (?) இருக்கிறோம்.
மனிதன் குகைகளில் வாழ்ந்த காலத்தில் இன்றைய உணவுகளில் 99% இல்லை. எனில் அவர்கள் என்ன உண்டு உயிர்வாழ்ந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.
ஏன் அந்தக் கேள்வி எழவேண்டும்? அதனால் நமக்கு என்ன லாபம்?
ஏனென்றால், அவர்கள்தான் நாம் இன்றைக்கு உயிரோடு இருக்கக் காரணமான நமது முன்னோர்கள். அவர்கள் அன்றைக்கு எதையோ சாப்பிட்டு ஆரோக்கியமாக உயிர்வாழ்ந்திருக்காவிட்டால், மனித இனமே பூண்டோடு அழிந்திருக்கும். இன்றைக்கு இதைப் படிக்க நீங்களோ, எழுத நானோ இருந்திருக்க வாய்ப்பில்லை.
காடும், பனியும் நிறைந்த உலகத்தில், நெருப்பு என்றால் கூட என்னவென்று அறியாத மனித சமூகத்திற்கு, ரிலையன்ஸோ, ஸ்பென்ஸர்ஸ் கடைகளோ இல்லை, அவர்களுக்கான உணவை அவர்கள்தான் வேட்டையாடி பச்சையாக உண்டு உயிர்வாழ்ந்தார்கள். சிகப்பு மாமிசம் தவிர்த்து மிஞ்சிப்போனால் சில கிழங்குகளோ, பழங்களோ அவர்களுக்கு உணவாக சீசனில் கிடைத்திருக்கலாம், எவை உண்ணத் தகுந்தவை என்று அவர்கள் குரங்குகளின் மூலம் அறிந்திருக்கலாம், அவ்வளவே.
ஆக, அந்தக் காலகட்டத்தில் அவர்கள் என்ன சாப்பிட்டு உயிர்வாழ்ந்து மனித இனத்தை அணு ஆயுதம் தயாரிக்கும் வரை வாழவைத்து இருக்கிறார்கள் என்று பார்த்தால், முக்கிய உயிர் வாழும் உணவாக அன்றைக்கு அவர்களுக்குக் கிடைத்தது நல்ல ஆரோக்கியமான சுத்தமான உயர் மாமிசக் கொழுப்பு.
ஆமாம், எதைச் சாப்பிட்டால் மாரடைப்பு வந்து இறந்துவிடுவீர்கள் என்று உங்களுக்கு முட்டையில் இருக்கும் மஞ்சள் கருவைக் கூட தூக்கிப் போடச் சொல்கிறார்களோ அதே கொழுப்புதான்.
ஆச்சரியமாக இருந்தாலும் நமது ஜீன்கள் இப்படித்தான் டிசைன் செய்யப்பட்டிருக்கின்றன. பிற்காலத்திய தானியங்கள் கொழுப்புடன் சேர்ந்து செய்த கொடுமைகளுக்கெல்லாம், கொழுப்பு பழிச்சொல்லை வாங்கிக்கொண்டு படாத பாடு படுகின்றது.
உடல் இயக்கத்திற்கான சக்தி:
உடல் இரண்டு வகையான எனர்ஜி சோர்ஸ்களில் இயங்குகிறது. ஒன்று க்ளுக்கோஸ் மற்றது கொழுப்பு. இன்றைக்கு நாம் சாப்பிடும் உணவுவகைகளைப் பட்டியலிட்டால் நாளொன்றுக்கு எவ்வளவு க்ளுக்கோஸ் சார்ந்த உணவுகளை சகட்டுமேனிக்குச் சாப்பிட்டு சைலன்ட்டாக கையைக் காலைக்கூட ஆட்டாமல் ஒரு ஆரோக்கியமற்ற வாழ்வு வாழ்கிறோம் என்பது தெரியும். கார்போஹைட்ரேட், பழச்சர்க்கரைகள், வெள்ளைச் சர்க்கரைகள், கோலாக்கள், இனிப்புகள், பேக்கரி ஐட்டங்கள், ஜன்க்புட் எனப்படும் குப்பை உணவுகள் என்று இது பெரிய பட்டியல்.
மற்றொரு எனர்ஜி சோர்ஸ் கொழுப்பு. ஆமாம், உடலுக்கு க்ளுக்கோஸ் மூலம் சக்தி கிடைக்கவில்லை என்றால் அது உயிர்வாழ தேர்ந்தெடுக்கும் மற்றொரு எனர்ஜி சோர்ஸ் கொழுப்பு.
இதில் கவனிக்கப்படவேண்டிய ஒரு முக்கியமான விஷயம், குறிப்பிட்ட அளவுக்கு மேல் உணவில் க்ளுக்கோஸ் அதிகமானால் உடலானது கொழுப்பை பத்திரமான வயிற்றைச் சுற்றி டயராக சேமித்துவிட்டு க்ளுக்கோஸை மட்டும் உடல் இயக்கத்திற்கான சக்தியாக எடுத்துக்கொள்கிறது.
உதாரணம் பார்ப்போம்:
உங்கள் ஒரு நாள் உணவில் 40 கிராம் அல்லது குறைவாக கார்போஹைட்ரேட் உணவுகளும், மற்றவை முழுவதும் கொழுப்பு சார்ந்த உணவுகளுமாக இருப்பின் உடலானது, க்ளுக்கோஸை கைவிட்டு கொழுப்பை தனது முக்கிய எனர்ஜிக்கான சோர்ஸாக எடுத்துக்கொள்ளும். அதே சமயம் 200 கிராம் கார்போஹைட்ரேட்டும் 300 கிராம் கொழுப்பும் இருந்தால், உடலானது க்ளுக்கோஸை மட்டும் எனர்ஜிக்கான சோர்சாக எடுத்துக்கொள்ளும், எனில் அந்த 300 கிராம் கொழுப்பு என்னாகும்?
அழகாக அதை நமது வயிற்றைச் சுற்றி சேமித்து வைக்கும், நாமும் அதற்கு தொப்பை என்று பெயரிட்டு அழைப்போம்.
உணவு சார்ந்த உடல் பருமனின் முக்கிய காரணி இதுதான். உடல் பருமன் மட்டுமல்ல, அதிகமாக ஆண்டுக்கணக்கில் சாப்பிடும் க்ளுக்கோஸ் மிகை உணவுகளால், இன்சுலின் பிரச்சனைகள் ஏற்பட்டு அதிகப்படியான மக்கள் டயபடிக் என்றழைக்கப்படும் சர்க்கரை நோயாளிகளாகவும் ஆவதற்கான காரணமும் இதுதான்.
எனில் உடல் பருமன் வராமல் தடுக்க, சர்க்கரை நோயாளியாகாமல் இருக்க என்ன ஆரோக்கியமான சாப்பிடுவது?
அதற்கு ஒரே வழி நமது முன்னோர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உண்டு உயிர் வாழ்ந்து நமது இனத்தையே காப்பாற்றிய உயர் கொழுப்பு உணவுகள்தான். அதைத்தான் பேலியோ டயட் அல்லது கேவ்மென் டயட் என்று அழைக்கிறோம்.
நெருப்பு கூட கண்டுபிடிக்கமுடியாத, காட்டுமிராண்டி காலத்து உணவை இன்றைக்கு எப்படி உண்பது?
ஆமாம், அது உண்மைதான், நாம் வேட்டையாடி, பச்சை மாமிசம் உண்ணமுடியாது. ஆனால் அந்த உணவின் ஆன்மாவைப் புரிந்துகொண்டு அதன்படி இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப உண்ணலாம்.
அதாவது உண்மையான உணவுகள்.
அதென்ன உண்மையான உணவுகள்? ருசிக்காக சேர்க்கப்படும் ரசாயணங்கள் கலப்பில்லாத, ஆரோக்கியமான தானியங்கள், கார்ப்போஹைட்ரேட் தவிர்த்த, கொழுப்பு சார்ந்த உணவுகளே உண்மையான உணவுகள்.
ஏன் தானியங்களின் மீது இவ்வளவு வன்மம்?
ஒரு வாய்க்காத் தகறாரும் இல்லை, தானியங்கள் நமது உடலுக்கு பெரும்பாலான நேரங்களில், நன்மைகளை விட தீமைகளையே அதிகம் செய்கின்றன. இதைப்பற்றி விரிவாகப் பின்னர் பார்ப்போம்.
கொழுப்பினால் தீமைகள் இல்லையா?
இல்லை, தானியங்களை ஒப்பிடும்போது நல்ல கொழுப்பு உடலில் பல நம்பமுடியாத நல்ல மாற்றங்களைச் செய்கின்றன, இவற்றைத்தான் விரிவாக இந்தத் தளத்தில் படிக்கப் போகிறோம்.