SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Tuesday, 20 June 2017

எல்லோருக்கும் வாய்க்கக்கூடியதா இந்தப் பேறு என்ற சந்தேகம் எழுந்தாலும், அதில் பாதி வாய்க்கப் பெற்றவர்கள் நாம். ஆமாம், பிறக்கும்வரை நாமும் இறை சிந்தனையுடன்தான் இருக்கிறோம். தாயின் வயிற்றில் குழந்தையிருக்கக்கூடிய சில படங்களை (மருத்துவ நூல்களில்) பார்க்கும்போதே தெரியும் – குழந்தை வளைந்து கும்பிட்ட நிலையில்தான் இருக்கும்!
ஏன் அப்படியிருக்க வேண்டும்? மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடலைப் பார்த்தால் விவரம் புரியும். ஓர் அற்புதமான ‘ஸ்கேனிங்’ பாடல் இது!
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒரு மதித்தான்றியின் இருமையில் பிழைத்தும்
இரு மதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும் மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களில் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்
(திருவாசகம்-கீர்த்தித் திருவகவல் – 13-26 வரிகள்)
தாயின் வயிற்றில் புழுக்களுடன் நிகழ்த்தும் கிருமிப் போரில் அழியாமல் தப்பிப் பிழைத்து, முதலாம் மாதம் தான்றிக்காயின் அளவிலே உருவான கரு தப்பிப் பிழைத்து, இரண்டாம் மாதம் மற்ற புழுக்களும் கருப்பையில் புகுந்து செய்யும் இடையூறுகளில் தப்பிப் பிழைத்து, மூன்றாம் மாதம் பெருகும் மதநீரினால் அழியாமல் தப்பிப் பிழைத்து, நான்காம் மாதம் கருப்பை அடைப்பு, வெடிப்பு முதலானவற்றால் அழியாமல் தப்பிப் பிழைத்து, ஐந்தாம் மாதம் மரணத்திலிருந்து தப்பிப் பிழைத்து, ஆறாம் மாதம் கருப்பையின் நெருக்குதலில் தப்பிப் பிழைத்து, ஏழு, எட்டு, ஒன்பதாம் மாதங்களில் கரு சிதையாமல் இடையூறுகளில் இருந்து தப்பிப் பிழைத்து…
‘யப்பாடா! பொறக்கறத்துக்குள்ள இவ்…வளவு இருக்கா?’ என்று அவசரப்பட்டு ஆச்சரியப்பட வேண்டாம்; இன்னும் பிறக்கவில்லை. அதைக் கடைசி இரு வரிகள் விவரிக்கின்றன: பத்தாவது மாதம் நாம் பிறக்கும்போது, தாயாருக்கும் பிரசவ வேதனை, நமக்கும் தாய் வயிற்றிலிருந்து வெளிப்படும் வேதனை! இவ்வளவுத் துயரங்களிலிருந்தும் தப்பிப் பிழைத்துப் பிறக்கிறோம்.
அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவதைப் போலக் கைகளைக் கூப்பியபடி கருவறையில் கிடக்கிறோம், பிறக்கிறோம். இது எங்கே நமக்குப் புரியாமல் போய்விடுமோ என்று எண்ணியே, தாயின் வயிற்றிலிருந்த பரீட்சித்தை பகவான் காப்பாற்றினார் என பாகவதம் விவரிக்கிறது.
தாயின் வயிற்றில் இருக்கும்போது, ‘ஆண்டவா! செய்த வினைகளின் காரணமாக வந்துவிட்டேனே!’ என்று இறை சிந்தனை இருக்கும். ஆனால் பிறந்து வெளிப்பட்ட பிறகு, வெளிக் காற்றுத் தாக்கியவுடன்… போச்சு! இறை சிந்தனை இல்லாமல் போய்விடும். அப்புறம் என்ன? பிறந்தவுடன் பசியின் காரணமாகப் பாலுக்கு அழத் தொடங்கி, வளர வளர ஒவ்வொன்றுக்காகவும் அழுது, அடுத்தவர்களையும் அழவைத்து… இப்படியே போய்க்கொண்டிருக்கிறது வாழ்க்கை!
இவற்றின் நடுவில் தெய்வ சிந்தனைக்கு இடம் ஏது? ஆனால், திருமூலர் இப்படிக் கருதவில்லை. கருவிலே கங்காதரன் நினைவோடு இருந்தவர், பிறந்த பிறகு தானும் அழாமல் அடுத்தவரையும் அழவைக்காமல் இருந்தவர் அவர். இன்னும் சொல்லப்போனால், ஐந்தறிவு படைத்த மாடுகளின் துயர் தீர்ப்பதற்காக, மூலனின் உடம்பில் கூடு விட்டுக்கூடு பாய்ந்தவர். அதன்பிறகும் கூட, சிவ சிந்தனையிலேயே இருந்து தவம் செய்து, நமக்காகத் தன் அனுபவங்களைத் திருமந்திரப் பாடல்களாகத் தந்தவர்.

No comments:

Post a Comment