SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Friday, 1 April 2016

 நலம் காக்கும் சித்தமருத்துவம்

நலம் காக்கும் சித்த மருத்துவம் : எண்ணெயிட்டு குளித்தல் – 14


தமிழர்களின் உடல் நலத்தினைப் பாதுகாத்துக் கொண்டிருந்த பல நல்ல பழக்கங்கள் இன்று காணாமல் போய்விட்டன. அவற்றில் எண்ணெயிட்டுக் குளிக்கும் பழக்கம் பல குடும்பங்களிலிருந்து மறைந்து விட்டது. அதற்கு அக்குடும்ப உறுப்பினர்கள் மட்டும் காரணமல்ல; எண்ணெயிட்டு குளிப்பதால் எந்தவித நன்மையும் உடலுக்கு கிடையாது என்கிற சில அறிவியலாளர்களின் தவறான பரப்புரையே முக்கியக் காரணமாகும். எண்ணெயிட்டுக் குளிப்பதை கைவிட்ட காரணத்தால் இன்று ஏற்பட்டிருக்கக்கூடிய உடல் துன்பங்கள் ஏராளம். தமிழர்களின் இது போன்ற பல பழக்கவழக்கங்களை தேடிக் கண்டுபிடித்துப் போற்றிப் பாதுகாத்தல் நம் ஒவ்வொருவருடைய தலையாய கடமையாகும்.

சித்தர் நூல்கள் எண்ணெயிட்டுக் குளிப்பதனால் ஏற்படும் உடல் நன்மைகளை மிகவும் விரிவாக விளக்குகின்றன. மேலும் பல நோய் நிலைகளிலும் மூலிகைகள் கலந்த எண்ணெயினைத் தேய்த்துக் குளித்த பின்புதான் மருந்துகள் கொடுக்க வேண்டும் எனத் தெளிவாகக் கூறப் பட்டுள்ளன. நோய்களுக்குத் தகுந்தவாறு குளியல் முறையும் மாறுபடும்.

எண்ணெயிட்டுக் குளிக்கும் முறை

சில குடும்பங்களில் எண்ணெய் இட்டுக் குளிக்கும் பழக்கம் தொடர்கின்றது என்ற செய்தி மகிழ்வைத் தருகிறது. அவர்களும் சித்தர்கள் கூறியபடியாக எண்ணெய் இட்டுக் குளிப்பதில்லை. சிலர் தலைக்குமட்டும் எண்ணெய் இடுகின்றார்கள்.

எண்ணெயிட்டுக் குளிக்கும் போது உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை எல்லா இடங்களிலும் எண்ணெய் முழுமையாகப் பரவியிருக்க வேண்டும். உடலின் ஒன்பது துளைகளிலும் ( நவ வாசல்கள் ) எண்ணெய் விடல் வேண்டும். கண்களுக்கு 2 – 3 துளிகளும், மூக்கில் 4 துளிகளும், காதுகளுக்கு 6 துளிகளும் விடல் வேண்டும். தலை, கால், பாதம், உள்ளங்கை ஆகிய இடங்களில் எண்ணெயினை மிகுதியாகப் பயன்படுத்த வேண்டும். உடலில் தேய்க்கும் போது சூடு ஏற்படக் கூடாது. உடலில் மிருதுவாக அழுத்தம் கொடுத்தும் விரல் நுனிகளால் தேய்த்தும் தசைப் பகுதியில் இலகுவாகத் தட்டி விட்டும் முதுகுத் தண்டுப் பகுதியில் உள்ளங்கையாலோ பெரு விரலாலோ நீவிவிட்டும் எண்ணெய் தேய்க்க வேண்டும்.

எண்ணெய் இட்டுத் தேய்த்த பின்பு குறைந்தது 40 நிமிடங்களாவது ஊற விடல் வேண்டும். அப்போதுதான் முழு பயனும் கிடைக்கும். எண்ணெயிட்டுக் குளிப்பதற்கு வெந்நீரையே பயன்படுத்தல் வேண்டும்.
  
எந்த எண்ணெய்ப் பயன்படுத்தலாம் ?

பொதுவாக நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது நன்று. நல்லெண்ணெய், விளக்கெண்ணை, பசுநெய் மூன்றும் சம அளவு கலந்து காய்ச்சியும் பயன்படுத்தலாம். இதற்கு முக்கூட்டு நெய் என்று பெயர்.

தேங்காய் நெய்யை தனியாக பயன்படுத்தியும் குளிக்கலாம். நல்லெண்ணெயுடன் மிளகு, சீரகம், பூண்டு, சிறு வெங்காயம் சேர்த்துக் காய்ச்சி பயன்படுத்தலாம். எண்ணெயில் வெந்த பூண்டையும், வெங்காயத்தையும் சாப்பிட்டு விட்டு மிளகு சீரகத்தோடு எண்ணெயையும் தலை உச்சியில் தேய்க்கலாம்.

விளக்கெண்ணெயுடன் சிறிய வெங்காயத்தைச் சேர்த்துக் காய்ச்சி பயன்படுத்தலாம். வெயில் காலத்திலும் உடல் சூடு கூடியிருக்கும் போதும் இந்தத் தைலம் சிறந்த பலனைக் கொடுக்கும்.

குளிர் காலத்தில் தேங்காய் நெய்யுடன் மிளகு சேர்த்துக் காய்ச்சிக் குளித்தால் உடல் குளிரைத் தாங்கும் ஆற்றல் பெறும். முற்றிய தேங்காயினை நீர்விடாமல் அரைத்துப் பாலெடுத்து அந்தப் பாலினைக் காய்ச்சிக் கொண்டிருந்தால் அது எண்ணெயாக மாறும். அதனை தென் தமிழகத்தில் உருக்கு நெய் என்கிறார்கள். இதனை பிறந்த குழந்தைகளுக்கு உடலில் பூசி குளிப்பாட்டுவதன் மூலமாக் தோல் தசை வலிமையடையும். குழந்தைகள் அழகான தோற்றத்தினைப் பெறும். பசும்பாலுடன் தேங்காய் நெய் சேர்த்துக் காய்ச்சிப் பயன்படுத்தினாலும் அதே நன்மைகள் உடலுக்குக் கிடைக்கும்.

நன்றாக உருக்கிய பசுநெய்யினை உடல்முழுவதும் பூசிக் குளிக்கும் பழக்கம் தமிழகத்தில் இருந்து வந்துள்ளது. இது உடல் சூட்டினைக் குறைத்து உடல் பலத்தினைக் கொடுக்கும்.

பசுநெய், நல்லெண்ணெய் சம அளவு கலந்து ஓமத்தை அதனுடன் கலந்து காய்ச்சிக் குளிப்பதால் தும்மல், மூக்கடைப்பு, தலை பாரம் நீங்கும்.

கற்றாழைச் சாறுடன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி பயன்படுத்தினால் உடல் சூடு தணிந்து உடல் வலிமை உண்டாகும். இரவு உறக்கம் வரும். கண் சூடு, எரிச்சல், சிகப்பு மாறும்.

சீரகம், நல்லெண்ணெய் கலந்து ( 100 மி.லி. க்கு 2 தேக்கரண்டி சீரகம் ) காய்ச்சி பயன்படுத்தினால் இரத்த அழுத்தம் சீராகும். தலைசுற்றல், மயக்கம், நாக்கின் கசப்புத்தன்மை நீங்கும்.

கறிவேப்பிலை,பொன்னாங்கண்ணி,கரிசலாங்கண்ணி, மருதாணி, நெல்லிக்காய், செம்பருத்தி, வெந்தயம் போன்ற ஏராளமான மூலிகைகளை எண்ணெயுடன் கலந்து காய்ச்சி பயன்படுத்துவதால் முடி பாதுகாக்கப்படுவதோடு கண் மற்றும் உடல் உறுப்புகள் வலிமையடைகின்றன.
  
எண்ணெயிட்டுக் குளிக்கும் போது உடலைத் தூய்மைப் படுத்த என்ன பயன்படுத்தலாம் ?

சிகைக்காய்ப் பொடியே சிறந்தது. சிகைக்காய்ப் பொடியும் பச்சைப் பயிறுப் பொடியும் ( பாசிப்பயிறு, சிறுபயிறு ) சம அளவு கலந்து சோறு வடித்த கஞ்சியுடன் நன்கு கலந்து பயன்படுத்தலாம். அதனுடன் செம்பருத்தி இலைப் பொடி, எலுமிச்சைத் தோல் பொடி, நெல்லி வற்றல் பொடி போன்ற மூலிகைப் பொடிகளையும் கலந்து பயன்படுத்தலாம்.

நோய் நிலைகளில் பயன்படுத்தும் தைலங்களுக்குத் தகுந்தவாறு தூய்மைப்படுத்தும் பொடிகளும் மாறுபடும் ( இலுப்பை பிண்ணாக்கு, உசிலம் பொடி போன்றவை ). சோப் மற்றும் ஷாம்பூ ( SOAPand SHAMPOO ) பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

உசிலம் பொடி, பூவந்திக் கொட்டை போன்றவற்றை சிகைக்காயுடன் சேர்த்து பயன்படுத்தும் போது நுரை உண்டாகும். முடியும் கேடடையாமல் தூய்மையாகும்.

எண்ணெயிட்டுக் குளித்தளினால் ஏற்படக் கூடிய பலன்கள் முழுமையாக நமக்குக் கிடைக்க சில வழிகளை சித்தர்கள் கூறியுள்ளனர். சில உணவுகளை நீக்கிவிட்டு சில உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளல் வேண்டும். அதே போன்று செயல்களிலும் சில கட்டுப்பாடுகள் அவசியம்.  

1. அதிகம் புளிப்புள்ள பொருட்கள் நீக்கப்படுதல் வேண்டும். புளிக்குப் பதில் குடம்புளி பயன்படுத்தலாம். நெல்லிக்காய், நாட்டுத்தக்காளி பயன்படுத்தலாம். மாங்காய் தவிர்க்கப்பட வேண்டும். 

2. வெண்பூசணி, அறுகீரை, கீரைத்தண்டு, கிழங்குகள், அகத்திக்கீரை, பாகல், கத்தரி, கொத்தவரை, கடலைப்பருப்பு நீக்க வேண்டும். 

3. பால், தயிர், நீக்க வேண்டும். மோர் சேர்த்துக் கொள்ளலாம். 

4. மொச்சை, பட்டாணி, கடுகு போன்ற எளிதில் செரிக்காத உணவுகள் நீக்கப் படவேண்டும். 

5. மது, புகை போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்தினால் பெரும் கேட்டினை விளைவிக்கும். 

6. குளிர்ந்த நீர் பயன்படுத்தாமல் வெந்நீர் குடிக்க வேண்டும். 

7. மாமிசம் நீக்குதல் வேண்டும். என்றாலும் வெள்ளாடு, முயல், பால்சுறா, அயிரை மீன் போன்ற எளிதில் செரிக்கும் உணவுகள் சேர்த்துக் கொள்ளலாம். 

8. புணர்ச்சி ( ஆண், பெண் கூடல் ) தவிர்க்கப்பட வேண்டும். 

9. பகல் உறக்கம் கூடாது. 

10. அதிக வெயில், அதிக குளிர்ச்சியுள்ள காற்று, அதிக உடல் உழைப்பு தவிர்க்கப்பட வேண்டும். 

11. பிஞ்சுக் காய்கள், துவரை, சிறுபயிறு, பொன்னாங்கண்ணி, சிறுகீரை போன்ற எளிதில் செரிக்கும் கீரைகள், மிளகு, சீரகம், ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், நெய் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொண்டால் எண்ணெய் குளியலின் பயன்கள் கூடும்.

    எண்ணெய் இட்டு குளித்தலினால் ஏற்படக் கூடிய நன்மைகளை நாம் அடுத்த வாரம் பார்க்கலாம்.

    நலப் பயணம் தொடரும்...............

    No comments:

    Post a Comment