SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Wednesday, 4 May 2016


உடலை குளிர்ச்சியாக்கும் முலாம் பழம் - இயற்கை மருத்துவம்
இயற்கை என்னும் மருத்துவர், கோடைகாலத்திற்கு என்றே படைக்கப்பட்ட பழமாக முலாம்பழத்தை சொல்லலாம்.
கோடையின் தாக்கம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலோடு அனல் காற்றும் வீசுகிறது. அதனால் வியர்வை பெருகுகிறது. உடல் சூடாகி, கட்டுக்கடங்காத தாகம் உருவாகிறது.
இந்த வெப்பத் தாக்குதலில் இருந்து தப்பிக்க நாம் ரொம்ப கஷ்டப்படவேண்டியதில்லை. எவ்வளவு அனல் அடித்தாலும் உடலை குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இயற்கை பருவகாலங்களுக்கு ஏற்ப பல உணவுகளையும், பழங்களையும் நமக்கு அளிக்கிறது. இயற்கை என்னும் மருத்துவர், கோடைகாலத்திற்கு என்றே படைக்கப்பட்ட பழமாக முலாம்பழத்தை சொல்லலாம்.
கோடை காலத்தில் நாம் உஷ்ணத்தால் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும் என்றால், அதற்கு ஏற்ற உணவுப் பழக்க வழக்கங்களையும், வாழ்க்கை முறையையும் மேற்கொள்ளவேண்டும். வியர்வை அதிகமாக உடலில் இருந்து வெளியேறும்போது உடலில் உள்ள தாதுஉப்புகள் குறைய ஆரம்பிக்கும். அதனால் விரைவில் சோர்வு ஏற்படும். பசி குறையும். உணவில் விருப்பமின்மை தோன்றும். இந்தநிலையில் ஆரோக்கியமாக, உற்சாகமாக செயல்பட உடனடியாக சக்தியளிக்கக்கூடிய பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். நீர் சத்து அதிகம் உள்ள பழங்கள் கோடைகாலத்தில் நிறைய கிடைக்கிறது. அவைகளில் முக்கியமானது முலாம் பழம்.
முலாம்பழம் கொடியில் காய்க்கிறது. இதன் தோல் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பின்னல்கள் போன்ற வடிவங்கள் காணப்படும். உள்பகுதியில் தசைப்பற்று மிகுந்திருக்கும். நடுவில் விதைகள் காணப்படும். இந்த பழம் ஒருவித நறுமணத்தை பரப்பும். வெட்டும்போது மணம் அதிகரிக்கும். அதனால் இதனை ஆங்கிலத்தில் ‘மஸ்க்மெலன்’ என்று அழைக்கிறோம்.
முலாம்பழத்தில் மாவுசத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் ஏ,பி,சி, போன்றவை நிறைந்திருக்கிறது. முலாம் பழத்தில் கரோட்டினாய்டு என்ற நிறமி இருப்பதால் அது மஞ்சள் நிறத்துடன் காணப்படுகிறது. இந்த நிறமியால் அதில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. இது கண்பார்வை சக்தியை அதிகரிக்கும். உடலுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும்.
முலாம்பழத்தில் ‘அஸ்காரிபிக் அமிலம்’ இருக்கிறது. இது வைட்டமின் சி சத்தை அளித்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. பொட்டாசியம் சத்து தசைகள் சுருங்கி விரிய உதவுகிறது. குறிப்பாக இதயத்தில் உள்ள தசைகளும், ரத்தகுழாய்களும் நன்றாக செயல்பட உதவுகிறது.
வாய்புண்களையும் ஆற்றும். ஈரலுக்கும் குளிர்ச்சியளிக்கும். சிறுநீர் எரிச்சலை தடுக்கும். ரத்த அழுத்தத்தை சீராக்கும். பித்தம் அதிகரிப்பதை தடுக்கும். மலச்சிக்கலையும் போக்கும். முலாம்பழத்தில் போலிக் அசிட் இருப்பதால் இது பெண்களுக்கு சிறந்த உணவாகும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடவேண்டும். சாப்பிட்டால், ஊட்டச்சத்து குறைபாட்டால் வயிற்றுக் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் நீங்கும்.
புகைபிடித்தலின் கொடுமையை உணர்ந்து அதில் இருந்து விடுபட நினைப்பவர்கள் முலாம்பழம் சாப்பிடவேண்டும். இதனை சாப்பிட்டால் புகைபிடிக்கும் எண்ணம் வராது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்த பழத்தின் தசையை அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகத்தில் உள்ள கருந்திட்டுகள் நீங்கும். முகமும் பொலிவு பெறும்.
சர்க்கரை நோய் உள்ளவர்களும் முலாம்பழத்தை சாப்பிடலாம். இதில் கிளைசிமிக் லோட் எனப்படும் சர்க்கரையின் எடை நான்கு புள்ளிகள் மட்டுமே உள்ளதால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது. இதில் உள்ள தரமான மாவுசத்து உடல் சோர்வை நீக்கி, உற்சாகமாக செயல்படவைக்கும்.
முலாம்பழ சாற்றுடன் பால் கலந்து சாப்பிடும் பழக்கம் உள்ளது. பழச்சாறு விற்பனை நிலையங்களில் பால் கலந்து அரைத்து கொடுக்கின்றனர். இது தவறானது. முலாம்பழத்துடன் பால் சேர்த்தால் ஒவ்வாமை தோன்றும். ஜீரண கோளாறும் உருவாகும். அதனால் பாலில் கலந்து இதனை சாப்பிடவேண்டாம்.
இந்த பழத்தின் விதையில் அதிகமான அளவு வைட்டமின் ஏ சத்து இருக் கிறது. விதையை அரைத்து கஞ்சியுடன் கலந்து சாப்பிட்டால் சிறுநீரக தொற்றால் ஏற்படும் நீர் எரிச்சல், நீர் சுருக்கு நீங்கும்.
முலாம் பழம் நீர்சத்து நிறைந்தது. ருசியானது.

No comments:

Post a Comment