SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Friday, 26 May 2017

தனிஷ்டா பஞ்சமி தொடர்....... 3.
அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமப்பட்டினம் செல்ல தடைகள் உள்ளன. அதாவது பூமிக்கும் எமலோகத்திற்கும் இடையே 27 நட்சத்திரங்களின் வழியாகச் செல்லும் 27 பாதைகள் உள்ளன. இதில் அடைப்பு ஏற்படுத்தும் 13 நட்சத்திரங்களின் பாதைகளைத் தவிர மற்ற 14 நட்சத்திரங்களின் வழியாகச் செல்பவர்கள் விரைவாக எமப்பட்டினத்தை அடைந்து விடுவார்கள். அடைப்பு ஏற்படுத்தும் 13 நட்சத்திரங்களின் வழியாக எமப்பட்டினம் செல்ல தூரமும், காலமும் அதிகமாகும். அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வழியாகச் செல்ல ஆறு மாதங்கள் அதிகமாகும். ரோகிணி வழியாகச் செல்ல நான்கு மாதங்கள் அதிகமாகும். கார்த்திகை, உத்திரம் என்ற இரண்டு நட்சத்திரங்கள் வழியாகச் செல்ல மூன்று மாதங்கள் அதிகமாகும். மிருகசீரிடம், சித்திரை, புனர்பூசம், விசாகம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் வழியாகச் செல்ல இரண்டு மாதங்கள் அதிகமாகும்.
ஒருவர் தற்பொழுது பிறந்துள்ள நட்சத்திரத்தை வைத்தே அவர் சென்ற பிறவியில் அடைப்புள்ள நட்சத்திரத்தில் இறந்தவரா ? இல்லையா ? என்று கண்டு கொள்ளலாம். மேலும் ஒருவரின் பிறவிக்கான வினை எந்த காரகத்துவத்தில் அமைந்துள்ளது என்பதைக் கூட நட்சத்திரம் மற்றும் அதன் அதிபதியான கிரகத்தை வைத்தும், அது நிற்கும் பாத சாரத்தை வைத்தும் கண்டு கொள்ளலாம். இப்படி ஒவ்வொரு பாவத்தையும், அது அமைந்துள்ள நட்சத்திரம், அதன் அதிபன், அவர் நிற்கும் நட்சத்திரத்தை வைத்து கண்டு கொள்ள முடியும். அதற்கு நுட்பமான சோதிட அறிவு வேண்டும். சென்ற பிறவியில் ஒருவர் இறக்கும் பொழுது எந்த நட்சத்திரத்தில் சந்திரன் எத்தனை நாழிகை சஞ்சாரம் செய்து கொண்டிருந்தாரோ, அதே நட்சத்திரத்தில் மீதமுள்ள நாழிகையில் மறுபிறவியில் அவதரிப்பார். இதைத்தான் ஜாதகத்தில் திசை கணக்கிடும் பொழுது கர்ப்ப செல் நீக்கி என்று போடுவார்கள்.
இப்பொழுது நமக்குள் உதயமாகும் கேள்வி என்ன ? இந்த அடைப்பு நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு கால தாமதம் ஆவதற்கான காரணம் என்ன ? தூரம் மட்டுமா ? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா ? இதற்கான தெளிவான விளக்கம் கருட புராணத்தில் உள்ளது. மன்னிக்கத் தகுந்த, மிகக் கொடிய பாவங்களைச் செய்யாதவர்களின் உயிர்கள் யம தூதர்களால் நேரடியாகவே கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு யமனானவர் அவ்வுயிர்களுக்கு பாவ, புண்ணியங்களைப் பற்றி உபதேசித்து பிறகு யம தூதர்களை அழைத்து மீண்டும் கொண்டு போய் அவர்கள் உடலிருக்கும் இடத்தில் விடச் செய்வார். இதற்கிடையே உடலானது மாந்தியால் சவமாக மாற்றப்பட்டு விடும். அங்கு வந்து சேரும் உயிரானது தங்கள் உறவினர்கள் நிலை, மற்றும் உடலுக்கு நடக்கும் சடங்குகளையும் பார்த்துக் கொண்டே இருக்கும். பிள்ளைகள் 12 தினங்களுக்கு அன்புடன் தரும் பிண்டங்களை ஏற்றுக் கொண்டேயிருக்கும். அதற்குப் பிறகு மீண்டும் அவ்வுயிரை யமதூதர்கள் கவர்ந்து சென்று யமனின் முன் நிறுத்துவார்கள். அங்கு அவர்களின் மறுபிறவி பற்றி தீர்மானிக்கப்பட்டு, அவ்வுயிர்கள் சந்திர மண்டலத்திற்கு வரும்.
ஆனால், தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரத்தில் இறந்த உயிர்களின் நிலையே வேறு. இந்த நட்சத்திரத்தில் இறப்பதே தண்டனையாக அமைகிறது. இவ்வுயிர்கள் எமலோகம் செல்வதற்கு முன் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு ஸ்தூல சரீரம் வழங்கப்படும். அவ்வுடம்பைப் பெற்ற தனிஷ்டா பஞ்சமி உயிர்கள் நாள் ஒன்றுக்கு நூற்றுக் கணக்கான காத தூரம் கல்லிலும், முள்ளிலும், காட்டுப் பாதையிலும் நடந்து செல்ல வேண்டும். அங்குள்ள செடிகள் மற்றும் மரங்களின் இலைகள் கூட கத்தி போலக் கூர்மையாக இருப்பதால் உடலைக் கிழித்து ரணமாக்கி விடும். தண்ணீரும், உணவும் கிடைக்காது. வெளிச்சமே இருக்காது. இதனால்தான் அடைப்பு காலங்கள் முழுவதும் தினந்தோறும் உணவும், தண்ணீரும், விளக்கும் வைத்து கற்பூரம் ஏற்றி, அவை அந்த உயிர்களைப் போய்ச் சேர வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தனை செய்யச் சொல்கிறார்கள். வழியில் பைனஸ் வதப்பட்டினத்தில் விசித்திரமான உருவ அமைப்புகள் கொண்ட மிருகங்கள் வாழும். அவை கொடுக்கும் தொல்லைகள் சொல்லில் அடங்காது. இவர்களுக்குப் போடும் பிண்டங்களைத் தட்டிப் பறிக்க தலைக்கு மேல் பைசாசங்கள் வேறு பறந்து கொண்டேயிருக்கும். நடக்க முடியாமல் துன்பப்படும் பொழுது கூட யம கிங்கரர்கள் அடித்து, உதைத்து நடக்க வைப்பார்கள். என்ன பாவம் செய்ததற்காக இப்படி உன்னைத் துன்புறுத்துகிறோம் என்று சொல்லிச் சொல்லி அடிப்பார்கள்.
இதையெல்லாம் கடந்தால் இரத்தமும், அழுகிய சதைகளும், மிதக்கும் பலகாத தூரம் அகலமான மிகப் பெரிய வென்னீர் நதியான வைதரணி நதியைக் கடக்க வேண்டும். இப்படிப் பல கொடுமைகளைக் கடந்துதான் இவர்கள் யமபுரியை அடைவார்கள். அதற்கு 6 மாதம், நான்கு மாதம், 3 மாதம், 2 மாதம் ஆகும். அந்தந்த தனிஷ்டா நட்சத்திரங்களுக்கு ஏற்றவாறு பாதையின் தூரமும், கொடுமைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எனவே இதையெல்லாம் உணர்ந்து, நம் உறவினர்கள் இந்த குறிப்பிட்ட நட்சத்திரங்களில் இறந்து விட்டால், அவரவர்க்கு உரிய காலம் வரை உணவும், தண்ணீரும், விளக்கும் வைத்து கற்பூரம் காட்டி இறைவனைப் பிரார்த்தனை செய்ய வேண்டும். மேலும் அவ்வுயிர்களுக்கு உதவும் வகையிலும், இறைவனின் கருணையைப் பெற வேண்டியும், ஏழைகள், முதியோர், நோயாளிகளுக்கு செருப்பு, கைத்தடி, வஸ்திரம், உணவு கொடுத்து வந்தாலோ அல்லது கோவில்களுக்கு எண்ணெயுடன் கிண்ணம் கொடுத்து வந்தாலோ அவ்வுயிர்களின் துன்பம் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. நாமும் இத்தகைய தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களில் இறக்காமல் இருக்கவும், நமது இறப்பும், அதற்கடுத்த பயணமும் துன்பமின்றி அமையவும் இறைவனை இடையறாது பிரார்த்திப்பதோடு, தீய எண்ணங்கள், செயல்களை விடுத்து நல்லதையே நினைத்து நன்மைகளைச் செய்வோமாக.
ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய கொடுமையான தோஷம் அவ்வுயிர்களுக்கு அவர்கள் செய்த பாவத்தினால் மட்டும் விளைவதில்லை. அவ்வுயிர்கள் பிறந்த ஏழு தலைமுறைகளில் ஏற்பட்ட பாவம் அல்லது சாபத்தினாலும் ஏற்படக் கூடும். எனவே அதற்குரிய பூஜை, பரிகாரங்களைச் செய்தால் சரியாகி விடும். அல்லாத பட்சத்தில் தனிஷ்டா பஞ்சமி மரணங்கள் அந்தக் குடும்பத்தில் தொடரக் கூடும். எனவே இதை மூட நம்பிக்கை என்று தள்ளாது, தோஷத்திற்கான காரணங்களை ஆராய்ந்து போக்கிக் கொள்ள வழி வகை செய்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment