தனிஷ்டா பஞ்சமி தொடர்.... 2.
மௌனத்தின் அலைகள் பகுதியில் தனிஷ்டா பஞ்சமி குறித்து பதிவிட்டவுடன் நிறைய கேள்விகள் எழுந்தன. எனவே அது குறித்து இன்னும் சற்று தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது. சூர்யனை ஆத்மாகாரகன் என்பார்கள். அதாவது ஒவ்வொரு கிரகங்களுக்கும் காரகத்துவம் என்று ஒன்று உண்டு. சூரியன் ஆத்மா மற்றும் பித்ருகாரகன், சந்திரன் உடல் மற்றும் மனோகாரகன், செவ்வாய் சகோதரகாரகன், புதன் வித்யாகாரகன், குரு புத்திரக்காரகன், சுக்கிரன் களத்திரக் காரகன், சனி ஆயுள்காரகன், இராகு போகக்காரகன், கேது ஞானக்காரகன் என்று பொதுவாகச் சொல்லப்பட்டு இருந்தாலும், நவகிரகங்களுக்கு என்று அவரவர்க்கு தனிப்பட்ட பல காரகத்துவங்கள் உண்டு. அந்தந்த காரகத்துவங்களின் மூலம் செய்யப்படும் வினைகளுக்கு பயன் அந்தந்த கிரகங்களின் மூலமாகவே தரப்படும் என்பது விதி. எனினும் எல்லா உயிர்களும் சூரியன் மூலமாகவே பூமிக்கு வருகின்றன. அதனால்தான் சூரியனை மையமாக வைத்து இலக்கினம் என்ற ஒன்றை குறிப்பார்கள். இலக்கு + இனம் என்று பதம் பிரித்துப் பார்க்கும் பொழுது உண்மை விளங்க வரும். இலக்கு என்றால் குறி. அதாவது எந்த குறிக்கோளை முன்னிட்டு இந்த ஜாதகர் ஜனித்துள்ளார் என்பதுவும், எந்த இனத்தில் ஜனித்துள்ளார் என்பதுவும் நல் ஜோதிடர் கண்டு கொள்வார். எல்லா உயிர்களின் குறிக்கோளும் முக்தியே என்றாலும், இந்தப் பிறவி முக்தியை வேண்டியா அல்லது ஏதேனும் பாவ புண்ணியங்களை கழிக்க வேண்டியா என்பதை இலக்கினம் சொல்லி விடும்.
இப்படி சூரியன் உயிரைத் தர முன்வரும் பொழுது, அந்த உயிரைச் சுமக்க உடல் வேண்டுமல்லவா ? அதைத் தருவது உடல்காரகனான சந்திரன். எனவேதான் அவர் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறாரோ அதை பிறந்த நட்சத்திரமாகச் சொல்வார்கள். அதற்குத் தோதாக இருபத்தி ஏழு நட்சத்திர மண்டலங்களாகவும், பன்னிரண்டு இராசி மண்டலங்களாகவும் ஆகாயத்தை பூமியை மையமாக வைத்து பிரித்திருப்பார்கள். உயிர் எதற்காக மீண்டும் பிறக்கிறது ? என்று சிந்தித்துப் பார்க்கின்ற பொழுது, தன்னிலிருந்து பிறக்கின்ற உயிர்கள் அனைத்தும் தன்னை உணர்ந்து சிவகதியான முக்தியை அடைய வேண்டும் என்பதற்காகவே. அத்தகைய ஞானம் வரும் வரை பிறவி நீள்கிறது. உயிரானது ஞானத்தை அடைவதற்கு இடையூறாகும் படிக்கு வினையாற்றும் பொழுது, அதை உணர்த்தும் விதமாக பிறவி அமைகிறது. இத்தகைய பிறவி இறைவனின் ஐந்தொழில் அடிப்படையில் நிகழ்கிறது. இவையனைத்தும் சூரிய மண்டலத்தில் உள்ள நவகிரகங்கள் மூலமாகவே நடக்கின்றது. முக்தி பெறும் உயிர்கள் கபாலத்தில் உள்ள நுட்பமான துவாரம் வழியாக சூரியனை அடைந்து பரம்பொருளைச் சேர்ந்து விடுகின்றன. முக்தி அடையத் தடையுள்ள உயிர்கள் உடலின் கண் உள்ள நவதுவாரங்களில் ஏதேனும் ஒன்றின் வழியாகப் பிரிந்து உடல்காரகனாகிய சந்திரனை அடைந்து, அங்கிருந்து எமலோகம் சென்று வந்து மீண்டும் பிறவி எடுக்க வேண்டி சந்திர மண்டலத்திற்கு வந்து உரிய காலம் வரும் வரை சூரிய பகவானின் உத்தரவுக்காகக் காத்து நிற்கின்றன.
பிறக்கும் உயிர்களுக்கு சூரியன் இலக்கினம் தருவது போல, இறக்கும் உயிர்களுக்கு சந்திரன் திதியை வழங்குகிறார். ஆதலால்தான் திதியை அடிப்படையாக வைத்து தர்ப்பணம் கொடுக்கப்படுகின்றது. அப்படிக் குறிப்பிட்டத் திதியன்று தர்ப்பணம் கொடுக்கப்படும் பொழுது மறுபிறவிக்காக சந்திரனில் காத்து நிற்கும் முன்னோர்களான வம்சத்தார்கள் வந்து அதை ஏற்று மனமைதியைப் பெறுகின்றனர். தர்ப்பணம் தரப்படவில்லை எனும் பொழுது அந்த முன்னோர்களின் உயிர்கள் ஏமாற்றமடைந்து சபித்து விடுவதால், அந்த வம்சத்தில் பிறக்கும் குழந்தைகள் பித்ரு தோசமுடைய குழந்தைகளாகப் பிறக்கின்றன. இத்தகைய ஜாதகங்களைப் பார்த்தால் பூர்வ புண்ணிய ஸ்தானம் கெட்டு, சூரியனின் பலம் குறைந்து, பித்ரு தோசம் நிறைந்த ஜாதகமாக அமைந்திருக்கும். இனி தனிஷ்டா என்கிற அடைப்பு பற்றி பார்ப்போம். அதாவது முக்தி அடையும் தகுதி பெறாத உயிர்கள் சந்திரனை அடைந்து அன்று அவர் எந்த நட்சத்திரத்தில் இருக்கின்றாரோ, அந்த நட்சத்திரத்தின் வழியாகவே எமலோகத்தை அடையும். இதில் கவனித்துப் பார்த்தால் அசுர குருவான சுக்கிரபகவானும், ஞானக்காரகனான கேது பகவானும் உயிர்களுக்கு அடைப்பை ஏற்படுத்துவதில்லை. உயிர்கள் அசுர குணம் உடையர்களாக இருந்தாலும் அவர்களை காக்கும் பொருட்டு தன் ஒரு கண்ணையே இழந்தவர் சுக்கிர பகவான். கேது வினாயகரின் அம்சமாதலாலும், உயிர்களின் விக்னங்களைத் தீர்ப்பவராதலாலும், ஞானக்காரகனாதலாலும் அவரும் அடைப்பைத் தருவதில்லை. மற்ற எழுவருமே அடைப்பை ஏற்படுத்துகிறார்கள்.
சிவ சூரிய பகவான் தனது மூன்று நட்சத்திரங்களான கார்த்திகை, உத்திரம், உத்திராடம் மூலமாகவும் அடைப்பை ஏற்படுத்துகிறார். முருகப் பொருமானின் அம்சமான செவ்வாய் தனது நட்சத்திரங்களான அவிட்டம், மிருகசீரிடம், சித்திரை மூலமாகவும் அடைப்பை ஏற்படுத்துகிறார். குருவும் தனது நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி மூலமாகவும் அடைப்பை ஏற்படுத்துகிறார். அதாவது முக்தியடையத் தகுதி இல்லாத கொடிய பாவங்கள் செய்த உயிர்களை சிவபெருமானும், முருகனும், குருவும் தண்டித்து மீண்டும் பிறக்கச் செய்து ஞானமடையச் செய்ய அடைப்பை உருவாக்கி விடுகின்றனர். ஒரு மனிதனுக்கு ஞானம் வேண்டுமென்றால் மனம் நல்வழிப்பட்டு ஒடுங்க வேண்டும். மனம் செம்மையடையவில்லை என்றால் ஆத்ம ஞானம் சித்திக்காது. மனிதனின் மன நிலை மாற்றங்களுக்கு காரகத்துவமாக அமையும் சந்திரபகவான் தன்னுடைய குளிர்ச்சியான சுபாவம் காரணமாக தனது மூன்று நட்சத்திரங்களில் ரோகிணியை மட்டுமே அடைப்பு நட்சத்திரமாக வைத்து விட்டு மற்ற இரண்டு நட்சத்திரங்களையும் அடைப்பில்லாத மார்க்கங்களாக அமைத்துக் கொண்டார்.
இராகு பகவான் போகத்தில் அழுத்தி அதன் மூலம் உயிர்களுக்கு ஞானத்தை வழங்குபவர். போகத்தை வெறுக்கும் உயிர்கள் குறைவே. ஏனெனில் இன்ப நுகர்ச்சி என்பது உயிரோடு கலந்த நுட்பமாகவே உள்ளது. எனவே உயிர்களோடு கலந்து விளங்குகின்ற இராகு பகவான் தனது நட்சத்திரங்களில் சனிபகவானின் வீட்டில் உள்ள சதயத்தை மட்டும் அடைப்பாக வைத்து விட்டு மற்ற இரண்டையும் திறந்து வைத்தார். நீதி அரசனான சனிபகவான் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர். கருணைக் கடல். ஒரு பசுவின் கன்றைக் கொன்றதினால் தன் மகனென்றும் பாராமல் தேர்க்காலில் இட்ட மனுநீதிச் சோழனை இன்றளவும் நாம் பாராட்டி மகிழ்கிறோம். ஏனெனில் நீதி அவ்வளவு பெருமையும், சக்தியும் வாய்ந்தது. அத்தகைய நீதியை தன் இயல்பாகக் கொண்ட சனி பகவான் உயிர்கள் மீது கொண்ட கருணையால் உத்திரட்டாதியை மட்டும் அடைப்பாக்கி மற்ற இரண்டையும் திறந்து வைத்தார். வித்தைக்கு அதிபதியான புதன் பகவான் கூட நடுநிலை வகிப்பவர்தான். புதனுக்குரிய ஐந்தாம் எண் என்பது ஒன்பது எண்களில் நடு நாயகமாகத் திகழ்கிறது. அது போல புதனுக்குரிய கிழமையான புதன் கிழமையும் நடுவில் மையமான கிழமையாகவே விளங்குகிறது. எனவே புதன்பகவானும் தன்னுடைய கருணை குணம் காரணமாக ரேவதியை மட்டும் அடைப்பாக்கி மற்ற இரண்டு நட்சத்திரங்களையும் திறந்து வைத்தார்.
இப்படிப் பலவிதமான நுட்பங்களும், சூக்கும இரகசியங்களும் காலச் சக்கரத்தின் பிறப்பு, இறப்பு என்கிற வட்டத்தில் அடங்கியுள்ளன. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். அதில் உள்ள சூட்சுமம் என்னவென்றால், கர்பத்தில் தவநிலையில் இருக்கும் வரைதான் அது தெய்வ நிலையாகும். அதற்கு முன் ஜீவாத்மாவாக விளங்கும் பொழுதோ அல்லது பிறந்து விட்ட பிறகோ அது தெய்வ நிலையாகாது. அது வினைகளுக்கும் அதன் பயன்களுக்கும் ஆட்பட்டு விடுகிறது. இறைவன் பழைய வினைகளை தன் மறைத்தல் தொழில் மூலம் மறைத்து கர்ப்பவாசத்தில் தவநிலையை உணர்த்தி, பத்து மாதங்கள் இருக்க வைத்த பிறகே பிறக்க வைக்கிறார். ஆனால், நாமோ அதை உணராமலேயே மீண்டும் சுழலில் சிக்கிய ஓடத்தைப் போல உழன்று கொண்டிருக்கிறோம். இதற்கு வலு சேர்க்கும் விதமாகப் மகாபாரதக் கதை ஒன்று உண்டு. அர்ஜுனன் இல்லாத நேரத்தில் கௌரவர்களின் வியூகத்தில் மாட்டிக் கொண்டு அபிமன்யூ இறந்து போகிறான். அர்ஜுனன் தன் மனகனின் இறப்பைக் கேள்விப்பட்டு அழுது புலம்புகிறான். எவ்வளவோ சமாதானங்கள் சொல்லியும் அவன் துக்கத்தைப் போக்க முடியவில்லை. மேலும் கண்ணனைக் கடுமையாக விமர்சிக்கிறான். நீ நினைத்தால் அபிமன்யூவைக் காப்பாற்றியிருக்கலாமே என்று கண்ணன் மேல் சாடுகிறான். அதைக் கேட்டக் கண்ணன் அவனுக்கு உண்மையை உணர்த்த வேண்டி, உன் மகன் சந்திர மண்டலத்தில்தான் இருக்கிறான் ''போய் பார்த்து விட்டு வா'' என்று அனுப்பி வைக்கிறான்.
அங்கு சென்ற அர்ஜுனன் தன் மகனைப் பார்த்ததும் ஓடிப் போய் '' மகனே அபிமன்யூ'' என்று கதறியழுத கட்டி அணைக்க முயல்கிறான். ஆனால், அபிமன்யூவோ எந்த வித சலனமுமில்லாமல் ''யார் யாருக்கு மகன் ?'' நீ ஒரு உயிர், நான் ஒரு உயிர். இந்த தந்தை மகன் உறவெல்லாம் உடலோடு மண்ணில் மறைந்து போகின்றன. இங்கே எந்த வித பந்த பாசங்களுக்கும் இடமில்லை என்று சொல்லி விலகிப் போகிறான். அதற்குப் பிறகு உண்மையை உணர்ந்த அர்ஜுனன் பூமிக்கு வந்து கண்ணனைப் பணிகிறான். இது போவே கர்ணனுக்கும் தன் வினைப் பயனாக மறுபிறவி வாய்த்தது. அதாவது மரணத் தருவாயில் தண்ணீர், தண்ணீர் என்று கர்ணன் புலம்பக் கேட்டக் கண்ணன் தன் ஆட்காட்டி விரலை கர்ணனின் வாயில் வைப்பான். அதிலிருந்து அமிர்தம் சுரக்கும். பசியும், தாகமும் வாட்டிய வேளையில் அந்த அமிர்தத்தை உணட கர்ணனனை பகவான் தன்னை வந்து சேரும்படிக்கு அருளுவார். ஆனால், கர்ணனோ நான் எல்லா தானமும் செய்து விட்டேன். ஆனால், அன்னதானம் செய்யவில்லை. இவ்வேளையில் தாங்கள் அதன் சிறப்பை உங்கள் விரல்கள் மூலமாக எனக்கு உணர்த்தி விட்டீர்கள் எனவே, ஒரு பிறவி எடுத்து அன்னதானம் செய்து விட்டு, அதற்குப் பிறகு முக்தியடையும் படி அருள வேண்டும் என்று வேண்டுவான். கண்ணனும் மர்மமாகப் புன்னகைத்தபடி வரம் தந்து விலகுவான். கர்ணனும் மாண்டு போவான்.
ஆனால். மறுபிறவி என்கிற பொழுது வினைகளும் உடன் செல்லுமல்லவா ? மறுபிறவியில் பல்லவ நாட்டின் தளபதியாகப் பரஞ்சோதியாக அவதரித்தந கர்ணன், சிறு தொண்ட நாயனாராக மாறி சிவத் தொண்டு புரிவான். அங்குதான் வினை வேலை செய்தது. இறுதி கட்டத்தில் அபிமன்யூ கர்ணனிடம் ''இல்லை என்று சொல்லையே அறியாத கர்ணா ஒரு உடைந்த வாளாவது கொடு, நான் போரிட்ட படியே சாவேன்'' என்கிறான். கர்ணனும் வாளைத் தரப்போகும் வேளையில் துரியோதனன் தடுக்கவே, அந்த வாளாலேயே அபிமன்யூவைக் குத்தி சாய்த்து விடுவான். அந்த அபிமன்யூவின் நம்பிக்கையை தகர்த்த துரோகச் செயலுக்குத் தண்டனையாகவே தன் மகனைத் தானே கறி சமைத்துத் தர வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்குப் பிறகு அனைவரையும் சிவ பெருமான் ஆட்கொண்டு விடுகிறார். சுபம்.
தொடரும்
No comments:
Post a Comment