சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!
உடலிருந்து சிறுநீரை வெளியேற்றும் சிறுநீர்க் குழாய் வீக்கமடைந்து எரிச்சலுக்கு ஆளாவதால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது.
காரணங்கள்:
சிறுநீர்ப் பாதையில் கிருமித் தொற்று அல்லது புண் இருப்பது, அதிகம் தண்ணீர் அருந்தாது, பால்வினை நோய்கள், அடிபடுதல், கருத்தடைச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் போன்றவற்றால் நீர்க்கடுப்பு ஏற்படலாம்.
அறிகுறிகள்
ஆண்களுக்கு சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, சிறுநீர் மற்றும் விந்துடன் ரத்தம் கலந்து வெளியேறும்.
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.
பெண்களுக்கு வயிற்றுவலி, சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, குளிர் மற்றும் காய்ச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, பிறப்புறுப்புக் கசிவு போன்றவை காணப்படும்.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
கைப்பிடி உளுந்தை நீரில் ஊறவைத்து, மறுநாள் அதிகாலை நீரை வடித்து, அந்த நீரை அரை டம்ளர் அருந்தலாம்.
கற்பாசியை அரைத்து இடுப்புப் பகுதியிலும், அடிவயிற்றிலும் பூசலாம்.
சிறு துண்டு கற்றாழையை நன்றாகக் கழுவி, வெண்ணெய், கற்கண்டு, வால் மிளகுத்தூள் சேர்த்து உண்ணலாம்.
கால் டம்ளர் பருப்புக் கீரையின் சாற்றை இரண்டு வேளை அருந்தலாம்.
அரை ஸ்பூன் முள்ளிக்கீரை வேர்ப்பொடியை நீர் கலந்து அருந்தலாம்.
சரக்கொன்றை புளியுடன் கடுகுரோகிணி, சுக்கு, வாய்விடங்கம், பெருங்காயம், படிகாரம், பொட்டிலுப்பு கூகைநீறு ஆகியவற்றை சேர்த்து அரைத்து அடிவயிற்றில் பற்றுப் போடலாம்.
செண்பகப் பூவுடன் பத்து மடங்கு நீர் சேர்த்துக் காய்ச்சி, அதில் அரை டம்ளர் அருந்தலாம்.
கைப்பிடியளவு சுரைக்கொடியை தண்ணீர் விட்டுக் காய்ச்சி, வடித்து வெண்ணெய் கலந்து அருந்தலாம்.
சதாவேரிக் கிழங்கின் பொடி அரைஸ்பூன் வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.
துத்தி வேர்ப்பொடியை அரை ஸ்பூனை திராட்சைப் பழச்சாற்றில் கலந்து சாப்பிடலாம்.
அரை ஸ்பூன் தேற்றான் விதைப்பொடி எடுத்து எலுமிச்சைச் சாறு, நீர் சேர்த்து உண்ணலாம்.
சேர்க்கவேண்டியவை:
திராட்சை, எலுமிச்சை, அன்னாசி, வெங்காயம், உருளைக்கிழங்கு முள்ளங்கி, பூசணி, வெள்ளரி.
தவிர்க்க வேண்டியவை:
துவர்ப்பு மற்றும் கார உணவுகள்.
3
வெண்புள்ளி
சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!
நம் உடலைப் போர்த்தியிருக்கும் சருமத்தின் எல்லாப் பகுதிகளிலும் இயல்பான நிறம் மாறி, வெள்ளை நிறம் தோன்றுவதை வெண்புள்ளி என்கிறோம். இது மெலனின் என்ற நிறமிக் குறைபாட்டால் ஏற்படுகிறது. வெவ்வேறு அளவுகள், வடிவங்களில் இருக்கும்.
இந்தப் புள்ளிகள் முதலில் ஓர் இடத்தில் தோன்றி, உடல் முழுவதும் பரவும். நிச்சயமாக, இது தொற்று நோய் அல்ல.
காரணங்கள்:
உணவில் புரதம் மற்றும் வைட்டமின் குறைபாடு
வயிற்றில் உள்ள கிருமிகள்
நாட்பட்ட வயிற்றுக் கோளாறுகள்
ஹார்மோன் பாதிப்பு
மன அழுத்தம்
நோய்வாய்ப்பட்ட நிலை
அமீபியாசிஸ்
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்
கார்போக அரிசியைப் பொடித்து, கால் ஸ்பூன் எடுத்து உண்ணலாம்.
காட்டுச் சீரகப் பொடி, மிளகுத் தூள் சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் நீரில் கலந்து சாப்பிடலாம்.
நுணா இலைப் பொடி, சுக்குப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் சாப்பிடலாம்.
அரை ஸ்பூன் கடுக்காய்ப் பொடியை நீரில் கலந்து உண்ணலாம்.
அதிமதுரப் பொடி, மிளகுப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.
வல்லாரை இலையை அரைத்து சுண்டைக்காய் அளவு காலையில் உண்ணலாம்.
அரை ஸ்பூன் செங்கொன்றைப் பட்டைப் பொடியில் நீர் சேர்த்துக் காய்ச்சி வடித்து, கால் டம்ளர் அருந்தலாம்.
அரை ஸ்பூன் அருகம்புல் பொடியில் ஆலம் பால் ஐந்து சொட்டுகள் கலந்து தொடர்ந்து 40 நாட்கள் தினமும் காலையில் உண்ணலாம்.
வேப்பிலை, ஒமம் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடித்து, அரை ஸ்பூன் உண்ணலாம்.
தராஇலை, ரோஜாப்பூ இதழ் இரண்டையும் சமஅளவு எடுத்து, உலர்த்திப் பொடித்து, அரை ஸ்பூன் உண்ணலாம்.
கரிப்பான் இலைப் பொடி, சுக்குப் பொடி சம அளவு கலந்து, அரை ஸ்பூன் உண்ணலாம்.
வெளிப்பிரயோகம்:
கற்கடாகசிங்கியைக் காடி நீரில் அரைத்துப் பூசலாம்.
கார்போக அரிசியையும், புளியங்கொட்டையையும் நீரில் ஊறவைத்து, அரைத்துப் பூசலாம்.
கண்டங் கத்தரிப் பழத்தைக் குழைய வேகவைத்து வடித்து, அதில் ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சிப் பூசலாம்.
துளசி இலையை மிளகுடன் சேர்த்து அரைத்துப் பூசலாம்.
முள்ளங்கி விதையைக் காடி நீரில் அரைத்துப் பூசலாம்.
மருதோன்றி இலைச் சாற்றில் தாளகத்தை இழைத்துப் பூசலாம்.
காட்டு மல்லிகை இலையை அரைத்துப் பூசலாம்.
சிவப்புக் களிமண்ணை இஞ்சிச் சாற்றில் கலந்து பூசலாம்.
மஞ்சளை நீர் சேர்த்துக் காய்ச்சி, வடித்து, அதில் கடுகெண்ணெய் சேர்த்து, நீர் வற்றும் வரை காய்ச்சிப் பின் பூசலாம்.
செங்கொன்றைப் பட்டையை அரைத்துப் பூசலாம்.
சேராங்கொட்டைத் தைலத்தைப் பூசலாம்.
சேர்க்க வேண்டியவை:
பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொட்டைகள், சிவப்புக் கீரை, பொன்னாங்கண்ணி, பசலைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கறிவேப்பிலை, இஞ்சி
தவிர்க்க வேண்டியவை:
காபி, தேநீர், சர்க்கரை, வெண்மையான மாவுப் பொருட்கள், தீட்டப்பட்ட தானியங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு, புளிப்புப் பொருட்கள் மற்றும் மீன்.
-
மூட்டு வலி
சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!
முதிர்ந்த வயதை நெருங்கும்போது, மூட்டு வலிதான் முதலில் எட்டிப்பார்க்கும்.
மூட்டுகள் சிதைவதால் மூட்டு வலி உண்டாகிறது; மூட்டுகளில் வீக்கத்துடன் கடுமையான வலியும் வரும். பெரும்பாலும் 55 வயதைத் தாண்டியப் பெண்களிடம் காணப்படும் இந்த வலிக்குக் காரணம், முதுமையை அடையும்போது, எலும்புகளின் முனைகளை மூடியுள்ள குருத்தெலும்புகள் தேய்ந்து முற்றிலும் அரிக்கப்படும். இந்த நிலையில் எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராய்வதால் ஏற்படும் பிரச்னையே.
முக்கிய காரணங்கள்: பரம்பரை, அதிக உடல் எடை, அதிக நேரம் சம்மணமிட்டு உட்கார்ந்து இருத்தல், சத்தான உணவுகளை உண்ணாமல் இருத்தல், எலும்பு முறிவு.
அறிகுறிகள்: காலையில் எழுந்திருக்கும்போது வலி அதிகரித்தும், நேரம் செல்லச் செல்லக் குறைந்தும் காணப்படும். நடக்கும்போது அதிகரித்தும், ஓய்வின் போது வலி குறைவாகவும் இருக்கும். மூட்டுகளைஅசைக்கும்போது, ஒருவிதமான ஒலியை (Criptations)உணரலாம்; இணைப்புகளைச்(Joints)சுற்றியுள்ள தசைகளும் தசை நாண்களும் வலுவிழந்து விறைப்புடன் காணப்படும்; அதிகப்படியான எலும்பு வளர்ச்சிகளும், சிறு குருத்துகளும் (spur) வளரும். மூட்டுகள் வீங்கிக் கடினமாக இருக்கும்.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
அமுக்கரா கிழங்குப் பொடி அரை ஸ்பூன் எடுத்து தேன் கலந்து உண்ணலாம்.
சிற்றாமுட்டி சுக்கை கைப்பிடி அளவு எடுத்து, நான்கு டம்ளர் நீர் சேர்த்து ஒரு டம்ளராக வற்றவைத்து 30 மில்லி அருந்தலாம்.
குங்கிலியத்தைப் பொடித்து ஒரு கிராம் பாலில் கலந்து பருகலாம்.
தழுதாழை இலைப் பொடி, மிளகுத் தூள் சம அளவு கலந்து, அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.
நிலாவாரைத் தூள் ஒரு ஸ்பூன் எடுத்து, தேன் கலந்து உண்ணலாம்.
மருதம்பட்டை மற்றும் மாவிலங்குப் பட்டை சம அளவு பொடித்து, அதில் கால் ஸ்பூன் வெந்நீரில் கலந்து உண்ணலாம்.
வாகைப் பூ, வேப்பம் பூ சம அளவு எடுத்து உலர்த்திப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.
பிரண்டையின் வேர்ப் பொடி, முடக்கற்றான் இலைப் பொடி இவற்றை சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் பாலில் சேர்த்து உண்ணலாம்.
சங்கன் இலை, வேர்ப் பொடி சம அளவு எடுத்து, அதில் கால் ஸ்பூன் பாலில் உண்ணலாம்.
ஈயக்கொழுந்துப் கொடியை அரைக் கைப்பிடி அளவு எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்து, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
வெளிப்பிரயோகம்:
சிற்றாமணக்கு இலையை விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கிக் கட்டலாம்.
சுக்கை, எலுமிச்சை பழச்சாறு விட்டு அரைத்துப் 'பத்து’ப் போடலாம்.
குப்பைமேனி இலையுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைத்துப் 'பத்து’ப் போடலாம்.
புளி இலையை அரைத்து, நீர் சேர்த்துக் கொதிக்கவைத்துப் 'பத்து’ப் போடலாம்.
சதகுப்பை விதையை அவித்து, பின் சதகுப்பை வேருடன் சேர்த்து அரைத்துப் 'பத்து’ப் போடலாம்.
வசம்பை, காய்ச்சுக்கட்டி உடன் சேர்த்து அரைத்துப் 'பத்து’ப் போடலாம்.
வெங்காயத்தை, கடுகு எண்ணெய் உடன் சேர்த்து அரைத்துப் 'பத்து’ப் போடலாம்.
நொச்சி இலையை வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.
நீர்ப்பிரம்பி இலையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்டலாம்.
கருஞ்சீரகத்தை நீர்விட்டு அரைத்துப் பூசலாம்.
ஊமத்தை இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்டலாம்.
சேர்க்க வேண்டியவை: கோதுமை, பச்சைப்பயறு, குதிரைவாலி, தினை, சிவப்புச் சம்பா, பார்லி, இஞ்சி, நாட்டு வாழைப்பழம், பால், கீரை.
தவிர்க்க வேண்டியவை: கேழ்வரகு, கிழங்குவகை, காபி, டீ, எண்ணெய், வாழைக்காய், புளி.
No comments:
Post a Comment