SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Saturday 30 May 2015

வாகனங்களில் அதிக மைலேஜ் பெற இந்த வழிமுறையை கடைபிடிங்க!.


aaa (1)மாதத் தவணையில் பெட்ரோல் விலை தாறுமாறாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. எகிறி வரும் பெட்ரோல் விலையால், குதிரை வாங்கியும், சாட்டை வாங்க முடியாத குறையாக பெட்ரோல் காரை வாங்கிய பலர் வீட்டில் அழகு பொருளாக நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.பெட்ரோல் விலை உயர்வு அதிகரித்தாலும், அலுவலகம், வர்த்தக தேவைகள், சுற்றுலாக்களுக்கு காரை பயன்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்று.
எனவே, காரில் செல்லும்போது சில எளிய நடைமுறைகளை கடைபிடித்தால், எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும். கடந்த ஆண்டு எரிபொருள் சிக்கனத்திற்கான டிப்ஸ் செய்தியை வழங்கியிருந்தோம். இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த செய்தியை வழங்கினால் புதிய வாசகர்களுக்கு பயன்படும் என்ற நம்பிக்கையில் சில கூடுதல் தகவல்களுடன் தந்திருக்கிறோம்….!
தேவைக்கு மட்டும்
குறைந்த தூரம் செல்வதற்கு காரை பயன்படுத்துவதை தவிருங்கள். அடுத்த தெருவிற்கு செல்வதற்கும், தேவையில்லாமலும் காரை எடுப்பதை தவிர்ந்துக் கொள்ளுங்கள். நடந்தோ அல்லது சைக்கிளில் செல்ல பழகிக் கொள்ளுங்கள். கொஞ்சம் அதிகம் தூரம் என்றால் மோட்டார்சைக்கிளை பயன்படுத்துங்கள்.
மன கட்டுப்பாடு
சாலையில் உள்ள போக்குவரத்துக்கு தக்கவாறு வேகத்தை கட்டுப்படுத்தி ஓட்டப் பழகுங்கள். அடிக்கடி கியரை மாற்றும்போதும் கூடுதல் எரிபொருள் செலவாகும். கிளட்சையும் தேவையில்லாமல் மிதிப்பதாலும் கூடுதல் எரிபொருள் செலவாகும் என்பதை நினைவில் கொண்டு டிரைவிங் செய்யவும்.
சரியான கியர்
நிறுவனங்கள் கூறியுள்ளபடி, வேகத்திற்கு தக்கவாறு சரியான கியரில் காரை இயக்க பழகிக்கொள்ள வேண்டும். சிலர் கார் ஓட்டுவதில் நான் சூரப்புலி என்பதை காட்டுவதற்காக வண்டியை ஸ்டார்ட் செய்தவுடன் உடனுக்குடன் கியரை மாற்றி வேகமெடுத்து திறமையை பறைசாற்றுவர். இது தவறான டிரைவிங் என்பது மட்டுமல்ல, எரிபொருள் செலவு கூடுதல் ஆவதற்கு முக்கிய காரணமே இதுவாகத்தான் இருக்கும்.
சிக்னலில்…
நகரங்களில் டிரைவிங் செய்பவர்கள் சிக்னல்களில் நிறுத்தும் சூழ்நிலை ஏற்படுகையில், 25 வினாடிகளுக்கு மேல் தாமதம் ஏற்படும் என்றால் மட்டுமே எஞ்சினை ஆப் செய்யவும். 25வினாடிகளுக்குள் எஞ்சினை ஆப் செய்து, திரும்ப ஸ்டார்ட் செய்யும்போது எரிபொருளை மிச்சப்படுத்த முடியாது.
சர்வீஸ்
புதிய காராக இருந்தால்,தயாரிப்பு நிறுவனங்கள் பரிந்துரைத்த கால அளவிலும், பழைய காராக இருந்தால் மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது சர்வீஸ் செய்து விடுவது புத்திசாலித்தனம். இதேபோன்று, அடிக்கடி எஞ்சின் செக்கப் செய்வதும் 50 சதவீதம் எரிபொருள் சிக்கனத்தை உறுதி செய்யும்.
டயரில் காற்றழுத்தம்
காரை எடுப்பதற்கு முன் டயர்களில் காற்றின் அழுத்தம் சரியான அளவில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கிளம்புங்கள். மாதத்திற்கு ஒரு முறையாவது, டயர்களில் சரியான அளவில் காற்று பிடிப்பது நல்லது. டயர்களில் காற்றின் அழுத்தம் குறைந்தால், எஞ்சினுக்கு கூடுதல் பளு ஏற்பட்டு 5 சதவீதம் எரிபொருள் கூடுதல் செலவாகும்.
கூடுதல் சுமை
சுற்றுலா அல்லது வெளியூர் பயணங்கள் செல்லும்போது, தேவையில்லாத பொருட்களை கேரியர் தலையில் ஏற்றாதீர். கேரியரில் ஏற்றப்படும் பொருட்களின் எடை காரணமாக எஞ்சின் கூடுதல் சிரமத்தை ஏற்பதால் அதிக எரிபொருள் செலவாகும்.
வேகம்
நெடுஞ்சாலை பயணங்களின்போது, 60 முதல் 80 கி.மீ., வேகத்தில் சென்றால் அதிக எரிபொருள் சிக்கனம் கிடைக்கும். அதற்கு மேல் செல்லும்போது 5 முதல் 10 சதவீதத்திற்கும் கூடுதலான எரிபொருளை எஞ்சின் விழுங்கும்.
அடிக்கடி பிரேக்
தேவையில்லாமல் அடிக்கடி பிரேக் பிடிப்பது, காரை நிறுத்துவது போன்றவற்றை தவிர்ப்பதாலும், எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும். தவிர, அடிக்கடி பிரேக் பிடிப்பதை தவிர்ப்பதால், டயர்கள் மற்றும் பிரேக்குளின் ஆயுட்காலமும் நீடிக்கும்.
ஏசி பயன்பாடு
குறைந்த வேகத்தில் செல்லும்போது ஏசியை ஆப் செய்துவிட்டு செல்லுங்கள். குறைந்த வேகத்தில் செல்லும்போது ஏசி ஆன் செய்திருந்தால் எஞ்சினுக்கு சுமை கூடும் என்பதால் அதிக எரிபொருளை எடுத்துக்கொள்ளும்.
வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் நேரம்…
வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவதற்கு அதிகாலை மற்றும் இரவு நேரம்தான ஏற்றது என்கின்றனர் ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள். பெட்ரோல் எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டது. எனவே, குளிர்ச்சியான சமயங்களில் பெட்ரோல் நிரப்பும்போதுதான் அதன் அடர்த்தி சரியானதாக இருக்கும். பகல் வேளைகளில் வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும் என்பதால், அதன் அடர்த்தி குறையும். இதனால், நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் நிரப்பும்போது அது சரியான அளவு இருக்கும் என்பது சந்தேகம்தான்.
காலி பண்ணாதீங்க
பெட்ரோல் டேங்க் காலியாகும் வரை காத்திருக்காமல் கால் டேங்க் இருக்கும்போதே நிரப்புவதும் நல்லது. முழுவதும் காலியாகும்போது பெட்ரோல் அதிகமாக ஆவியாக வாய்ப்பு அதிகம்.
அளவு முக்கியம்
பெட்ரோல் நிலையத்தில் டேங்கர் லாரியிலிருந்து தொட்டியில் பெட்ரோல் நிரப்பும்போது, அந்த தொட்டியிலிருந்து வரும் பெட்ரோலை நிரப்பாதீர்கள். அதில், தூசி தும்பட்டிகள் வரும் வாய்ப்பு உள்ளதோடு, மேலே நுரையாக இருக்கும் என்பதால், அளவும் சரியாக இருக்காது.
இதுவும் முக்கியம்
நீண்ட நேரம் வெளியில் காரை நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் முடிந்தவரை நிழலில் நிறுத்துவதும் முக்கியம்.
கார் பூலிங்
ஒரே இடத்திலிருந்து ஒரு பகுதியில் இருக்கும் அலுவலகங்களுக்கு செல்வோர் கார் பூலிங் அல்லது பைக் பூலிங் எனப்படும் பங்கீட்டு முறையை பின்பற்றி செல்வது போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவுவதோடு, எரிபொருள் செலவையும் கட்டுப்படுத்த முடியும்.
பெட்ரோல் பங்க்
அளவு மற்றும் தரத்தில் சிறந்த பெட்ரோல் நிலையங்களை இனம் கண்டுகொண்டு அங்கு பெட்ரோல் போடுங்கள்.
கியூ வேண்டாமே!
காரின் வேகத்தில்தான் எரிபொருள் சிக்கனத்திற்கான சூட்சுமம் அடங்கியுள்ளது. எனவே, சரியான வேகத்தில் காரை இயக்க பழகிக்கொண்டாலே போதும். அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறமுடியும். மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை நினைவில்கொண்டு டிரைவிங் செய்தால், அடிக்கடி பெட்ரோல் பங்க் கியூவில் நிற்பதை நிச்சயம் தவிர்க்கலாம்…

No comments:

Post a Comment