தன்னை முற்றிலும் அறிந்தவன், உணர்ந்தவன் யார்? எப்படி இருப்பான்?
பல நிறம், சுவை கொண்ட நீரோட்டங்கள் கடலில் கலந்த பின், அந்த கடலின் நிறத்தையும், சுவையையும் தாங்கி நிற்கின்றன.
புலன்களால் நுகரப்படுபவை எல்லாம் காமங்கள்.தன்னை முற்றிலும் உணர்ந்தவனுக்கு புலன்களால் நுகரக்கூடிய காமங்கள் அறவே கிடையாது.
நீர் தேவை இல்லாமலே, கடல் நிறைந்திருந்த போதிலும், தண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது.ஆறுகளிலோ, ஏரிகளிலோ தண்ணீர் வந்து சேர்ந்தால் வெள்ளப் பெருக்கு ஏற்படும்.ஆனால், கடலில் எந்த மாற்றத்தையும் உண்டு பண்ணாமல், தண்ணீராக வந்தடைந்த நீரோட்டங்கள் கடலுக்குள் மறைந்து விடுகின்றன.
அது போல தன்னை முற்றிலும் அறிந்தவனுக்கு, உலகியல் போகங்கள் சிறிது கூட தேவை இல்லை.அவை வந்து சேர்ந்தாலும் அவனுக்கு அவைகளால் எந்த பயனும் இல்லை.
ஆனாலும், முன் வினைப்பயனால் பல வித போகங்கள் அவனுக்கு வந்து சேர்கின்றன. அவனுடைய மனம், புத்தி, புலன்கள் முன் வினை காரணமாக பலவிதமான சாதகமான,சந்தர்ப்பமான விஷயங்களுக்கு ஆட்படலாம்.
அப்படி ஆட்படும் போகங்கள், அவனிடம் மகிழ்ச்சியையோ , துயரத்தையோ, விருப்பையோ, வெறுப்பையோ, காமத்தையோ, பகைமையையோ, பேராசையையோ, மோகத்தையோ, பயத்தையோ, கொந்தளிப்பையோ...இது போன்ற மற்ற எந்த விதமான அதீத மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், அவனுடைய உறுதிப்பாட்டிலிருந்து சிறிது கூட நகராமல் இருக்கச் செய்யும்.
மேலே கூறியவை வந்து சேர்வதால், அவனுடைய நிலையில் சிறிது கூட மாற்றம் ஏற்படாது.
அவன் தான் தன்னை முற்றிலும் அறிந்தவன்.
No comments:
Post a Comment